சென்னை, அக்.12-
இந்தியாவில் முதல் முறையாக ரூ.53 கோடி செலவில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்ட கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வண்ண மீன் வர்த்தகத்தை பெரிய அளவில் மேம்படுத்தவும், கொளத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் வர்த்தகத்தை உலக அளவில் கொண்டு செல்லவும், தமிழ்நாட்டில் முதல்முறையாக உலகத்தரத்திலான பிரத்யேக வண்ண மீன் வர்த்தக மையம் நிறுவப்படும் என 2021-22-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் ஒருங்கிணைப்புடன், சென்னை, வில்லிவாக்கம், சிவசக்தி நகரில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் அமைத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி அன்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம் 15,945 சதுர மீட்டர் நிலப் பரப்பளவில் 11,650 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவில் ரூ.53 கோடி செலவில் தரை மற்றும் 2 தளங்களுடன் மொத்தம் 188 கடைகள், அதில் 5 உணவகங்களுடன் 14 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வண்ண மீன் வர்த்தக மையத்தில் கழிவறை வசதிகள், உருளை வடிவ மீன் காட்சியகம், 3 மின்தூக்கிகள், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, 45 ஆயிரம் லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் 3 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், 200 இரு சக்கர வாகனங்களும், 188 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர ஆய்வகம், பயிற்சிக் கூடம், உணவு அரங்கம், பார்வையாளர் அரங்கம் ஆகிய வசதிகளுடன் வண்ண மீன் உற்பத்தியாளர், விற்பனையாளர் மற்றும் ஏற்றுமதியாளர் ஆகியோருக்கான சந்திப்பு மையமாக கட்டமைக்கப்பட்டு உள்ளது.
இந்த வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். ஒவ்வொரு கடையையும், வர்த்தக மையத்தின் நடுவில் அமைக்கப்பட்டு இருந்த உருளை வடிவ மீன் கண்காட்சியையும் பார்த்தார். பின்னர் வர்த்தக மையத்தையொட்டி அமைக்கப்பட்டு இருந்த மேடையில் கடை ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அதற்கான ஆணைகளை வழங்கினார்.
சென்னையின் புதிய அடையாளம்
அப்போது கடை உரிமையாளர்கள் அபிதா பேகம், பாபு கூறுகையில், ‘இவ்வளவு வசதியுடன் வண்ண மீன் வர்த்தக மையம் வேறு எங்கும் அமைத்து கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் எங்களுக்கு அமைத்து கொடுத்தது மகிழ்ச்சி. இந்த வர்த்தக மையத்தில் எங்கள் கடை இருப்பது பெருமை. நிச்சயம் இந்த மையம் பொழுதுபோக்கு இடமாக இருக்கும்' என்றனர்.
சென்னையின் புதிய அடையாளமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வண்ண மீன் வர்த்தக மையத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், இப்பகுதியில் வண்ண மீன் வர்த்தகம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்து, நாட்டிற்கே முன் மாதிரியாக அமையும்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.பி.க்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் ந.சுப்பையன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.