தீபாவளி பண்டிகை விற்பனை: தி.நகரில் அலைமோதிய கூட்டம் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்பு
சென்னை, அக். 12–
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் புத்தாடை வாங்குவதற்காக சென்னை தி.நகரில் குவிந்தனர்.
தீபாவளி பண்டிகை 20–ந் தேதி (திங்கள் கிழமை) கொண்டாடப்படு கிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம். இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தீபாவளி பொருட்கள் வாங்க பஜார் வீதிகளில் திரள தொடங்கினர்.
குடும்பம், குடும்பமாக வந்து தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பேண்ட், சர்ட், சுடிதார், ஜீன்ஸ், சேலை, வேஷ்டி உள்ளிட்ட துணிமணிகளை தேர்ந்தெடுத்து வாங்கினர். அதே நேரத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விதவிதமான டிசைன்களில் துணிகள் வந்து குவிந்துள்ளது. புதிய மாடல் ஆடைகளையும் மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்ற காட்சியை காணமுடிந்தது. பல துணி கடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இன்று காணப்பட்டது. கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடைகளுக்கு வெளியே காத்து இருந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
கூட்டம் அலைமோதியது
வர்த்தக பகுதியான சென்னை தியாகராயநகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரெங்கநாதன் தெரு வழக்கம் போல் மனித தலைகளாக காட்சியளித்தன. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் தீபாவளி பர்சஸில் மும்முரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு துணிகடைகள் முன்பாக மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. குறிப்பாக தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் புதிய துணிகளை வாங்கிய காட்சியை காண முடிந்தது. ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தி.நகர் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் குலுங்கின. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள சாலையோரம் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
80 கண்காணிப்பு கேமிராக்கள்
அதே நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தி.நகர் ரங்கநாதன் தெருவில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம் மற்றும் அருகிலுள்ள இன்னொரு சாலையிலும் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் தி.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிக்க உள்ளனர்.தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகரில் மட்டும் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பலத்த போலீஸ் பாதுகாப்புபோலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில், தி.நகர் துணை கமிஷனர் குத்தாலிங்கம், உதவி கமிஷனர் சுரேஷ், இன்ஸ்பெக்டர் ரஞ்சித் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை மாநகர பகுதியில் மட்டும் 18 ஆயிரம் போலீசார் தீபாவளியையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள். அனைத்து பகுதிகளிலும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் அதிக அளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென கமிஷனர் அருண் அறிவுறுத்தி இருக்கிறார்.
இதன்படி இணை கமிஷனர்கள் துணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தீபாவளியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதே போல் சென்னையில் பழைய வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், குரோம்பேட்டை, பாடி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் காலை நேரத்திலேயே வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. அவர்கள் தங்களுக்கு தேவையான துணிமணிகளை வாங்கி சென்றனர். தமிழகம் முழுவதம் தீபாவளி பண்டிகை விற்பனை களைகட்டியது. பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து தீபாவளி பண்டிகைக்கான பொருட்களை தேர்வு செய்து வாங்கி சென்றனர்.