
சென்னை, அக். 15-
இலவசத்துடன் பெண்களை ஒப்பிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்கக் கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள் என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்.
திராவிட மாடல் அரசு மக்களின் நலனுக்காக, குறிப்பாக மகளிர் முன்னேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப் பெண் , பணிபுரியும் மகளிர்க்கு தோழி விடுதிகள் , சுய உதவி குழு மகளிருக்கு கடன் வரம்பை அதிகரித்தல் , மகளிரை தொழில் முனைவோர் ஆக்கும் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது.
சி.வி.சண்முகம் பெண்களை இலவசத்துடன் ஒப்பிட்டு கொச்சைப்படுத்திருப்பதன் மூலம் அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல்வாதியாக அல்ல; மனிதராக இருக்கவே தகுதியற்றவர் அவர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. ஆளுமை இல்லாத பழனிசாமி இதை கண்டிக்கவில்லை. பழனிசாமி வீட்டிலும் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களுக்கும் சேர்த்துத்தானே சேற்றை வாரி வீசியிருக்கிறார் சி.வி.சண்முகம். பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு. பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?