ஒரு டபரா மாவில் இட்லி வேக வைத்துத் தந்தால் அதற்கு 20 ரூபாய். அதே மாவை தோசையாக்கினால் 100 ரூபாய். ஏன் இந்த வித்தியாசம்?
- இது பலரும் பல சமயங்களில் கேட்கும் கேள்வி.
நான் உணவகம் நடத்துபவனல்ல. ஆனால் மேலே உள்ள கேள்வியில் லாஜிக் இல்லை என்பது தெரியும்.
ஒரே ஒரு இட்லி மட்டும் வேக வைப்பதில்லை. ஒரு ஈடில் பல இட்லிகள் வேகும். இட்லியை மொத்தமாக வேக வைத்து ஹாட் பாக்ஸில் சேமித்து வைத்து ஓரளவு சூட்டுடன் பரிமாறுவார்கள். சமயத்தில் சூடு இல்லையென்றாலும் கூட சாம்பாரைச் சுடச் சுட மேலே ஊற்றித் தந்து விடுவதால் அவ்வளவாக கண்டுபிடிக்க முடியாது.
ஆனால் தோசை அப்படியல்ல. அதுவும் பேப்பர் தோசையெல்லாம் சில நிமிடங்கள் ஆறினாலும் நமத்துப் போனச் செய்தி வெளியான நாளிதழ் போல ஆகி விடும். ருசி இருக்காது. ஒரே நேரத்தில் ஒரு பெரிய தோசைக் கல்லில் ஒரு சில தோசைக்கள்தான் வார்க்க முடியும். ஒவ்வொரு தோசைக்கும் எண்ணெய் தேவை. நெய்த் தோசையாக இருந்தால் எண்ணெய் கலந்த நெய் தேவை. இப்படி நிறையக் கணக்குகள் இருக்கு.
சரி.. ஒரு உணவகத்தில் தோசை ரூ. 100 என்று வைத்துக் கொள்வோம். அதில் மாவுக்கான விலை + மாவு அரைப்பதற்கான விலை + அதை அரைப்பவருக்கான சம்பளம் + அதை வார்ப்பவருக்கான சம்பளம் + அதை எடுத்து வருபவருக்கான சம்பளம் + நாம் சாப்பிட்ட தட்டு, டம்ப்ளர்களை எடுத்து வருபவருக்கான சம்பளம் + அவற்றை கழுபவருக்கான சம்பளம் + மேசையை சுத்தப்படுத்துபவருக்கான சம்பளம் + மேசையில் கொண்டு வந்து வைக்கும் இலவசக் குடிநீருக்கான செலவு + உணவகத்தைச் சுத்தப்படுத்துபவருக்கான சம்பளம் + கட்டட வாடகை + மின் கட்டணம் + முதலீட்டுக்கான வருமானம் + கடன் எதுவுமிருந்தால் அதற்கான வட்டி + லாபம் என்று இத்தனையும் அதில் கணக்கிடப்படும்.
அதே உணவகம். அதே தோசை. ஆனால் ஏ.சி. அறைக்குள் சென்று அமர்ந்தால் 10 முதல் 20% வரைக் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஏன் என்று கேட்டால் மின் கட்டணம் அதிகம் என்பார்கள்.
உணவகத்தில் பார்சல் வாங்கினால், பார்சல் செய்யப் பயன்படுத்தும் அட்டைப் பெட்டிகள், கவர் ஆகியவற்றுக்குக் கூடுதல் கட்டணம் வாங்குவார்கள். பல உணவகங்களில் அவற்றில் அவர்களுடைய உணவக விளம்பரங்களை அச்சிட்டிருப்பார்கள். ஆனாலும் அவர்கள் விளம்பர டப்பாக்களுக்கு நாம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.
உணவு வழங்கும் நிறுவனங்கள் மூலமாகவோ, அல்லது உணவகத்திலிருந்து நேரடியாக ஆட்கள் வைத்து வீட்டில் கொண்டு வந்து தரும் போதோ அதற்கான டெலிவரிக் கட்டணமும் சேர்த்து வாங்கப்படுகிறது.
எல்லாம் சரிதான். ஆனால் உணவகத்திலேயே பார்சல் வாங்கும் போதோ, உணவை வீட்டுக்கு கொண்டு வந்து தரும் போதோ அவர்கள் கூடுதலாக பார்சல் கட்டணம் + டெலிவரிக் கட்டணம் வாங்குவது சரியே. ஆனால் ஏற்கனவே அந்த உணவில் அவர்கள் சேர்த்து வைத்துள்ள மேசை துடைக்கும் கட்டணம், அங்கே வைக்கும் குடிநீர் செலவு, பாத்திரங்கள் கழுவும் செலவு, அங்கே நாம் அரை மணி நேரம் அமர்ந்திருந்து சாப்பிட்டால் ஆகும் மின்சாரச் செலவு என்று அவ்வளவும் கிடையாதுதானே? அப்போது அவற்றை உணவின் விலையில் குறைத்துக் கொள்ள வேண்டுமா, இல்லையா? அதை ஏன் குறைப்பதில்லை?
ஒரு உணவக உரிமையாளரிடம் இதைக் கேட்டேன். பதிலே சொல்லாமல் முறைத்துப் பார்த்து விட்டுச் சென்று விட்டார்.
நிஜமாகவே தெரியாமல்தான் கேட்கிறேன்.
லால்குடி வெ நாராயணன்