தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி உயர்வானது, தமிழ் இந்தியாவின் பெருமிதம் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி (மன் கி பாத்) மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 128-வது நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.
அதில் பிரதமர் மோடி பேசியதாவது:-
நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு சட்ட தினத்தன்று பாராளுமன்ற மைய அரங்கில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு 150வது ஆண்டு நிறைவையொட்டி நாடு முழுவதிலும் நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக தொடங்கப்பட்டன. நவம்பர் மாதம் 25ம் தேதி அயோத்தியின் ராமர் கோவிலில் காவிக்கொடி ஏற்றப்பட்டது. இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பலான மாஹே மும்பையில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இவ்வாறு நவம்பர் மாதம் பல உத்வேகங்களை நமக்குக் கொண்டு வந்திருக்கிறது.
காசி தமிழ் சங்கமம் டிசம்பர் 2–ந்தேதி காசி நமோ படித்துறையில் தொடங்குகிறது. இந்தாண்டுக்கான கருப்பொருளாக, ‘தமிழ் கற்கலாம்' என்ற மிகவும் சுவாரஸ்யமான தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வரும் நமது சகோதர, சகோதரிகளை மகிழ்வோடு வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சி பல தரப்பினரையும் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமையும். இந்நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். காசி தமிழ் சங்கமம் என்பது, தமிழ் மொழியை விரும்பும் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தமிழ் கலாச்சாரம் உயர்வானது. தமிழ் மொழி சிறப்பானது. தமிழ் மொழி இந்தியாவின் பெருமிதம்.
தேன் உற்பத்தி அதிகரிப்பு
தேன் உற்பத்தியில் இந்தியா புதிய சாதனைகளை படைத்து வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் தேன் உற்பத்தி இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தேன் ஏற்றுமதியும் 3 மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. தேன் உற்பத்தி இயக்க திட்டத்தின் கீழ், காதி கிராமோத்யாக் சார்பில் 2.25 லட்சத்திற்கும் மேற்பட்ட தேனீ பெட்டிகள் மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இது ஆயிரக்கணக்கான மக்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, ஐதராபாத்தில் உலகின் மிகப் பெரிய இன்ஜின் எம்.ஆர்.ஓ வசதியைத் தொடக்கி வைத்தேன்.
தானிய உற்பத்தி அதிகரிப்பு
357 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியில் இந்தியா ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது. விவசாய துறையில் இது பெரிய மைல்கல். 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 100 மில்லியன் டன் அதிகரித்துள்ளது. விளையாட்டு துறையில், உலகில் இந்தியா மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டவுள்ளது. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியா நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சாதனைகள் தேசத்திற்கும், நாட்டு மக்களுக்கும் சொந்தமானது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.