இந்திய பொருளாதாரம் 7.4 சதவீதமாக உயரும்: மத்திய புள்ளியியல் துறை தகவல்

இந்திய பொருளாதாரம் 7.4 சதவீதமாக உயரும்: மத்திய புள்ளியியல் துறை தகவல்



புதுடெல்லி, ஜன. –


இந்திய பொருளாதரம் 7.4 சதவீதமாக உயரும் என மத்திய புள்ளியியல்துறை தகவல் தெரிவித்துள்ளது.


இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி நிலையை அளவிடும் முக்கியமான குறியீடாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜ.டி.பி.) கருதப்படுகிறது. நாட்டில் ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.


தொழிற்துறை, சேவைத் துறை, வேளாண்மை போன்ற துறைகளின் செயல்திறன் நேரடியாக இந்திய பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்ந்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் உயர்ந்ததாக கருதப்படும். ஒவ்வொரு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறிப்பிட்ட அளவில் உயர்த்த நிர்ணயிக்கப்பட்டு அதற்காக பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள் உழைத்து வருகின்றன. மேலும் ஒவ்வொரு நிதியாண்டு இறுதியில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வளவாக இருந்தது எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.


நடப்பு நிதியாண்டில் (2025-–26) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. தற்போது மத்திய புள்ளியில் துறை அதனை திருத்தி உயர்த்தி அறிவித்துள்ளது. புவிசார் அரசியல் அழுத்தம், வரிவிதிப்பு உள்ளிட்டவற்றையும் கடந்து உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு காரணமாக நாட்டின் பொருளாதாரம் 7.4 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது.


இது 2024-–25 நிதியாண்டில் பதிவான 6.5 சதவீதத்தை காட்டிலும் 0.9 சதவீதம் அதிகமாகும். மேலும் மத்திய ரிசர்வ் வங்கி கணித்த இந்திய பொருளாதார மதிப்பை காட்டிலும் 0.1 சதவீதம் அதிகமாகும். உற்பத்தித்துறை மற்றும் சேவைத்துறைகளின் மேம்பட்ட செயல்திறனே இந்த உயர்ந்த வளர்ச்சிக்கு காரணங்களாகும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.


தேசிய வருமானத்தின் முதல் முன்மதிப்பீட்டின்படி உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறைகள் தலா 7 சதவீதம் வளர்ச்சியடையும் என புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கணித்துள்ளது. சேவைத்துறை வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கிய இயக்க சக்தியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள், மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கள் மற்றும் பிற பயன்பாட்டு சேவைகள் ஆகிய துறைகள் நடப்பு நிதியாண்டில் முறையே 3.1 சதவீதம் மற்றும் 2.1 சதவீதம் அடைந்து மிதமான வளர்ச்சியையே பதிவு செய்யும் என கணித்துள்ளது.


நடப்பு விலைகளை கொண்டு கணக்கீடப்படும் பெயரளவு ஜி.டி.பி. 8 சதவீதமாகவும், பணவீக்கத்தை கொண்ட கணக்கீடப்படும் உண்மையான ஜி.டி.பி. 7.4 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%