தெருநாய்களை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
புதுடெல்லி, ஜன.–
ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவதால் தெருநாய்களை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் தீவிரம் காட்ட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் தெரு நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. நாய்க்கடியால் ஏற்படும் ‘ரேபிஸ்’ நோய் தாக்கி பலர் இறக்கிறார்கள். இது மட்டுமல்லாமல் விபத்துகளும் ஏற்படுகின்றன.இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘பஸ் நிலையம், ஆஸ்பத்திரி, பள்ளி வளாகம், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும். பொது இடங்களில் தெருநாய்கள் நுழையாமல் கண்காணித்து தடுக்க வேண்டும்’ என பல்வேறு வழிகாட்டுதல்களை உருவாக்கி அதனை மாநில அரசுகள் முறையாக பின்பற்ற உத்தரவிட்டது.
மேலும், ‘தெரு நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்’ என்றும் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மாற்றியமைக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் சார்பில் தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரிய மனுதாரருக் காக ஆஜரான வக்கீல், ‘தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சர்வதேச நடைமுறைகளை நாமும் பின்பற்றலாம். ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் கருணைக் கொலை மையங்கள் உள்ளன.
கைவிடப்பட்ட நாய்கள் அங்கு அழைத்துச்செல்லப்படும். குறிப்பிட்ட நாட்கள் தங்கவைக்கப்படும். யாரும் அந்த நாய்களை தத்தெடுக்கவில்லை என்றால் அவை கருணைக்கொலை செய்யப்படும். ஜப்பானில் தெரு நாய் பிரச்சினை இல்லாததற்கு இதுவே காரணம். 1950-ம் ஆண்டு முதல் அங்கு வெறிநாய்க்கடி மரணங்கள் எதுவும் இல்லை என்றார்.
விலங்கு நல ஆர்வலர் ஒருவர் கோர்ட்டில் ஆஜராகி, ‘அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைப்பது சரியான நடைமுறையாக இருக்காது. நாய்களை ஒழித்து விட்டால் சில மாநிலங்களில் குரங்குகள் பிரச்சினை கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவுக்கு அதிகரித்துவிடும்’ என தெரிவித்தார்.
நாய்களை பிடிப்பதற்கு எதிராக ஆஜரான மூத்த வக்கீல், ‘தெருநாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி போட்டு, மீண்டும் அதே இடத்தில் விட்டு விடலாம். இதன்மூலம் நகரங்களில் தெருநாய் பிரச்சினையை ஒழிக்க முடியும்’ என்றும் வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘நாங்கள் ஏற்கனவே உத்தரவை மாற்றி அமைத்துள்ளோம். இப்போது கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே நாய்கள் இருக்கக்கூடாது என சொல்லியுள்ளோம். ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், நீதிமன்றங்களுக்குள் தெரு நாய்கள் சுற்றி திரிவதால் என்ன மாதிரியான பாதிப்பை பொதுமக்கள் சந்திக்க நேரிடும்? என்பது எல்லோருக்கும் தெரியும்.
எனவே, இதுபோன்ற இடங்களில் தெருநாய்களை அகற்றுவதில் என்ன பிரச்சினை? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் நீதிபதிகள், ‘தெருநாய்கள் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. புலி மனிதனை கொல்கிறது என்பதற்காக எல்லா புலிகளையும் கொல்வதற்கு உத்தரவிட முடியாது. பொதுமக்களுக்கு பாதிப்பு என வருகிற போது, அந்த பாதிப்பை தடுக்க என்னென்ன மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் தெருநாய்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை இந்த நீதிமன்றம் எடுத்து வருகிறது.
சாலைகளை பொறுத்தமட்டில் தெருநாய்கள் இல்லாமல் இருக்க வேண்டும். தெருநாய்கள் கடிப்பதால் மட்டுமல்ல அவை சாலைகளில் சுற்றித்திரிவதாலும் உயிரிழப்பு போன்ற பெரும் ஆபத்தை பொதுமக்கள் தினம்தோறும் சந்தித்து வருகின்றனர்.
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளாலும் விபத்துகள் நடக்கிறது. பெரும்பாலான சாலை விபத்துகள் தெருநாய்களால் நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள் எந்த மனநிலையில் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அது, எப்போது கடிக்கும், எப்போது அமைதியாக இருக்கும் என்பதையெல்லாம் கணிக்க முடியாது.
தீவிரமான பிரச்சினை
கடந்த 20 நாட்களுக்கு முன்பு கூட, ராஜஸ்தானைச் சேர்ந்த 2 நீதிபதிகள், தெருநாய்களால் விபத்தில் சிக்கி உள்ளனர்.
அதில் ஒரு நீதிபதி, இன்னும் முதுகுத்தண்டில் காயங்களால் அவதிப்படுகிறார். எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்தும் வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
இது ஒரு தீவிரமான பிரச்சினை. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த பிறப்பித்த வழிகாட்டுதல்களை பின்பற்றாத மாநிலங்களிடம் இந்த நீதிமன்றம் கடுமையாக நடந்து கொள்ளும்.
மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், கர்நாடகா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்கள் இன்னும் இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்து வது தொடர்பான பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யவில்லை. சில மாநிலங்கள் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்கள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை’ எனக்கூறி விசாரணையை தள்ளிவைத்தனர்.