இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கை தவறானது: ப.சிதம்பரம்

இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கை தவறானது: ப.சிதம்பரம்



கசவுலி: ஆபரேஷன் புளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கையை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்டது தவறு என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சர்ச்சை ஆகியுள்ளது.


“பொற்கோயிலில் ஆபரேஷன் புளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது தவறானது. அதை நான் ஏற்கிறேன். அதற்காக தனது உயிரையே பறிகொடுத்தார் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. அந்த தவறில் ராணுவம், காவல் துறை, புலனாய்வு பிரிவு மற்றும் குடிமைப் பணியாளர்களின் பங்கும் உள்ளது.


என்னுடைய பஞ்சாப் மாநில பயணங்களில் நான் கண்டது என்னவென்றால் அங்கு காலிஸ்தான் கோரிக்கை அல்லது பிரிவினைவாதம் ஒழிந்துவிட்டது. அங்கு இப்போது நிலவும் அசல் பிரச்சினை என்னவென்றால் அது பொருளாதார சூழல்தான்” என இமாச்சலில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் ப.சிதம்பரம் தெரிவித்தார்.


ஆபரேஷன் புளூ ஸ்டார்: 1984-ல் பஞ்சாபில் பொற்கோயில் வளாகத்துக்குள் புகுந்திருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை அடக்க ஆபரேஷன் புளூ ஸ்டார் ராணுவ நடவடிக்கை தொடர்பான உத்தரவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கையெழுத்திட்டார். பொற்கோயிலுக்குள் இந்திய ராணுவம் நுழைந்தது, ஆபரேஷன் புளூ ஸ்டார் வெற்றியடைந்தது.


இதைத் தொடர்ந்து இந்திராவின் சீக்கியப் பாதுகாவலர்களால் அவரது உயிருக்கு ஆபத்து என்று உளவுத்துறை எச்சரித்தது. உயிரையே இழக்க நேர்ந்தாலும் மதத்தின் அடிப்படையில் தனது பாதுகாவலர்களை மாற்ற இந்திரா காந்தி மறுத்துவிட்டார். இந்திரா காந்தி மிகவும் நம்பிய பாதுகாவலர்கள் ப்யாந்த் சிங், சட்வந்த் சிங் இருவரின் துப்பாக்கிகளிலிருந்து 33 குண்டுகள் இந்திராகாந்தியின் உடலைத் துளைத்தன. இந்தியாவின் இரும்புப் பெண்மணி 66 வயதில் தனது உயிரை இழந்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%