மாணவிகளை இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது - மம்தா பானர்ஜி அறிவுரை
Oct 13 2025
60
கொல்கத்தா: துர்காபூரில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், மாணவிகள் இரவில் வெளியே செல்ல கல்லூரிகள் அனுமதிக்கக் கூடாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "இந்த சம்பவத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தங்கள் மாணவர்களை, குறிப்பாக பெண்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. பெண்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சம்பவம் நடந்தது வனப்பகுதியாக உள்ளது. போலீசார் குற்றவாளிகள் அனைவரையும் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள். யார் குற்றவாளியாக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இச்சம்பவத்தில் ஏற்கெனவே மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இது மற்ற மாநிலங்களில் நடக்கும்போது, அதுவும் கண்டிக்கத்தக்கது" என்று அவர் கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில், ஒடிசாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிக்கிறார். இவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் நேற்று முன்தினம் மாலை வெளியே சென்று விட்டு இரவு 8.30 மணியளவில் கல்லூரிக்கு திரும்பினார்.
அப்போது ஒரு கும்பல் மருத்துவ மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியுடன் சென்ற ஆண் நண்பர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இச்சம்பவம் குறித்து மாணவியின் தந்தை நேற்று போலீஸில் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவ மாணவியின் நண்பர் உட்பட பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவி துர்காபூரில் உள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-----------
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?