இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 இணைகளுக்கு திருமணம் - உதயநிதி நேரில் வாழ்த்து
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்து சமய அறநிலையத்துறையின் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுப் பொருட்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்த ஓராண்டில் மட்டும் அறநிலையத்துறை சார்பாக 1000 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைக்க வேண்டும் என்பது இலக்கு.
அதன்படி, முதல்வர், கடந்த ஜுலை மாதம் சுமார் 775 இணையர்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்தார். இன்றைக்கு, இங்கும், தமிழ்நாடு முழுவதும் நடத்தி வைக்கப்படுகின்ற திருமணங்களின் மூலம், அறநிலையத்துறையின் இலக்கு நிறைவேறியுள்ளது.
இன்று நடைபெறுகின்ற திருமணங்களில் பெரும்பாலான திருமணங்கள் காதல் திருமணங்கள்தான், எனவே இது அறநிலையத்துறையா, அன்பு நிலையத்துறையா என்கின்ற வகையில் அவ்வளவு காதல் திருமணங்களை அண்ணன் சேகர்பாபு நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இணையர்களை பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி. எல்லோருமே நன்கு படித்துள்ளார்கள், அது கூடுதல் மகிழ்ச்சியை தருகின்றது.
50, 60 வருடங்களுக்கு முன்பெல்லாம் இது சாத்தியமில்லை. மணமக்கள் உங்களுடைய அப்பா – அம்மா அல்லது தாத்தா பாட்டியின் திருமண பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால், அதில் அவர்கள் படித்து வாங்கிய பட்டம் இருக்காது. மாறாக சமுதாய பெயர், அவர்களுடைய சாதிபேர் தான் இருந்திருக்கும். ஆனால், இன்றைக்கு சாதி பெயர்கள் இருப்பதில்லை. மணமக்கள் படித்து வாங்கிய பட்டங்களின் பெயர்கள்தான் இருக்கின்றன. இந்த பெருமை தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் இருக்கின்றது.
இதற்கு காரணம், நமது திராவிட இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தான். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் நடத்திய பல்வேறு போராட்டங்களின் காரணமாகத்தான், இத்தனை சீர்திருத்தங்களும் தமிழ்நாட்டிற்கு இன்றைக்கு வந்து இருக்கின்றது.
குறிப்பாக இன்றைக்கு மகளிர் நிறையேபேர் வந்திருக்கின்றீர்கள். மகளிர் மேம்பாட்டுக்காக நம்முடைய முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். முக்கியமாக மகளிர் விடியல் பயணத் திட்டம். ஆட்சிக்கு வந்ததுமே, மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு தான் நம்முடைய முதலமைச்சர் கையெழுத்திட்டார்.
இந்த விடியல் பயணத் திட்டம் மூலமாக இந்த நான்கரை வருடங்களில் கிட்டத்தட்ட 780 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கின்றார்கள். ஒரு திட்டத்தை எப்படி அழகாக பயன்படுத்த வேண்டும் என்று மகளிரிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மகளிரும் இந்த திட்டத்தின் மூலமாக மாதம் 1,000 ரூபாய் சேமிக்கின்றார்கள். இதுதான் இந்த திட்டத்தின் வெற்றி.
அதே மாதிரி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றார்கள். சமீபத்தில் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சிக்காக பஞ்சாப் மாநில முதலமைச்சர் சென்னைக்கு வந்திருந்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குழந்தைகளிடம் பேசிவிட்டு, இந்த திட்டத்தை பாராட்டினார்.