அந்த ருக்மணியின் முகபாவத்தில் சோகமானாள் ஹரிணி. ஆனாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல், “சொல்லுங்கம்மா” என்றாள் இயல்பாக.
"நான் … இவரைப் பார்த்திருக்கேன்” என்றாள்.
நெற்றி சுருக்கினாள் ஹரிணி.
“பார்த்திருக்கேன்னா… நேர்ல இல்லை… யூ-டியூப்ல!... அது செரி ஹரிணி… வீட்ல உன்னோட மெழுகுத்தாய் எப்படியிருக்காங்க?” என்று ருக்மணி கேட்க,
அதிர்ந்து போன ஹரிணி, “ஹி…ஹி…உங்களுக்கு அதெல்லாம் தெரியுமா?” அசடு வழிந்தாள்..
“தெரியாம?... அதான் யூ-டியூப்ல வீடியோ போட்டு உருக்கமாய்ச் சொல்லி உலக ஃபேமஸ் ஆயிட்டாரே உங்கப்பா”
“என்ன ருக்மணி சொல்றே? எனக்கு எதுவுமே புரியலை” குழப்பமாய்க் கேட்டார் ருக்மணியின் கணவர் மாசிலாமணி.
அவர் கையிலிருந்த மொபைலை அவசரமாய் வாங்கி யூ-டியூபிற்குள் சென்று, ஹரிணியின் தந்தை பதித்திருந்த அந்த வீடியோ பதிவைக் காட்டினாள் ருக்மணி.
“என் மனைவி மேல் நான் உயிரையே வைத்திருந்தேன் அவளோட இழப்பை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை!... அப்பத்தான் வெளிநாட்டுல ஒருத்தர் தன் அப்பா உருவத்தை மெழுகு பொம்மையா செஞ்சு… வீட்டுல வெச்சு… அன்பு காட்டி வாழ்ந்திட்டிருக்கார்!ங்கற விஷயத்தை யூ-டியூப்ல பார்த்தேன், உடனே அவரைத் தொடர்பு கொண்டு அவர் மூலமா என் மனைவியோட மெழுகு பொம்மை செய்தேன்!... அச்சு அசலா அப்படியே என் மனைவி உருவம்!... உண்மையில் அவளே என் கூட இருக்கற மாதிரி இருக்கு!... இப்ப தெனமும் அந்த மெழுகு பொம்மையோட பேசறேன்.. சாப்பிடச் சொல்லி ஊட்டிக் கூட விடறேன், … பக்கத்துல உட்கார்ந்து நேரம் போறது தெரியாம பேசிட்டிருக்கேன்… நான் சாகிற வரைக்கும் அவ என் கூட இருப்பா மெழுகு பொம்மையா”
ஹரிணியின் அப்பா வித்யாசங்கர் தழுதழுக்கப் பேசி முடித்து, மெழுகு மனைவியை அற்புதமாய் வீடியோ எடுத்து போட்டிருந்தார்.
“அம்மா ஹரிணி…. உங்கப்பா இன்னும் அந்த மெழுகு பொம்மையோட சந்தோஷமா வாழ்ந்திட்டிருக்கார்… அதான் மறு கல்யாணத்துல ஆர்வமே இல்லாம இருந்திருக்கார்… இப்படிப்பட்ட ஒருத்தருக்கு எங்க மகளைக் கட்டி வெச்சா… அவ இரண்டாம் இடத்துலதான் இருப்பா… மெழுகு பொம்மைதான் முதல் இடத்தில் இருக்கும்… அதாவது எங்க மகள் உயிருள்ள பொம்மையாய்த்தான் இருப்பா… அப்படியொரு போலி வாழ்க்கை அவளுக்குத் தேவையில்லை” சொல்லியபடியே எழுந்த ருக்மணி, “கிளம்புங்க” என்று கணவர் மாசிலாமணியின் தோளைத் தட்ட,
அவரும் எழுந்து பின் தொடர்ந்தார்.
வாயடைத்துப் போனாள் ஹரிணி.
அதே நேரம்,
“என்ன சார்… இந்த மெழுகு பொம்மையை அதிக விலை வெளிநாட்டிலிருந்து வாங்குனீங்க… உயிரோட இருக்குற சம்சாரத்தைப் பார்த்துக்கற மாதிரி… கண்ணுக்குக் கண்ணா பார்த்துக்கிட்டீங்க… இப்ப “பொசுக்”குன்னு வெளிநாட்டுக்கே திரும்பி அனுப்பறீங்களே ஏன் சார்?” அந்த இண்டர்நேஷனல் கார்கோ சர்வீஸ்காரன் கேட்க,
“காலம் பூராவும் இந்த மெழுகு மனைவியோடவே வாழ்ந்திடலாம்னுதான் நெனச்சேன்.. ஆனா என் மகள் அவளுக்கு இன்னொரு அம்மா… அதுவும் உயிருள்ள அம்மா வேணும்ன்னு அடம்பிடிக்கறா… நான் அவளுக்காக… ஒத்துக்க வேண்டியதா போச்சு... இப்பக் கூட அவ எனக்காக ஒரு பெண்ணைப் பார்த்து மறுமணத்திற்கு நாள் குறிக்கத்தான் போயிருக்கா!”
“இதையும் வீட்டுல ஒரு மூலைல வெச்சுக்க வேண்டியதுதானே?...”
“ம்ஹும்… கூடாது… புதுசா வர்ற அந்த இன்னொரு அம்மாவுக்கு அது வீண் மனச் சங்கடங்களைக் கொடுக்கும்… எனக்கே கூட சில் நேரங்கள் அதைப் பார்த்தா பழைய ஞாபகங்கள் வரும்… தேவையில்லாத பிரச்சினைகள் வரும்… அதான் திருப்பி வெளிநாட்டுக்கே அனுப்பறேன்… இது ஒரு வகை காஸ்ட்லி மெழுகு… இதை உருக்கி அவங்க இன்னொரு பொம்மை செய்திடுவாங்க”
“ஓ.கே…சார்” மிகவும் கவனமாய் வித்யாசங்கரின் மெழுகு மனைவியை வேனில் ஏற்றிக் கொண்டு பறந்தான் கார்கோ ஆசாமி.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்