தேர்தல் நாள்.
மக்கள் ஆங்காங்கே பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்க அந்த ஏழு இளைஞர்கள் மட்டும் கோவில் மண்டபத்தில் அமர்ந்து வீண் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.
"ஏம்ப்பா... ஊரே ஓட்டுப் போட வரிசைல நின்னுட்டிருக்கு... நீங்க போகலையா?" ஒரு வளர்ந்து வரும் அரசியல்வாதி கேட்க,
"எதுக்கு... எதுக்கு ஓட்டுப் போடணும்?" ஒருவன் கேட்க,
"நம்ம நாட்டுக்கு நாம ஆற்றும் ஜனநாயகக் கடமையப்பா அது"
"நாடு எங்களுக்கு என்ன செஞ்சுது... நாங்க எதுக்கு ஜனநாயக கடமை ஆற்றணும்?"
"ஹும்... உங்களுக்கெல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது" அந்த அரசியல்வாதி நகர,
மதிய நேர வெயில் அனல் கக்கியது.
கையில் தடியை ஊன்றியபடி நடந்து வந்த ஒரு பழுத்த கிழவி திடீரென்று மயங்கி விழ, இந்த இளைஞர்கள் எழுந்து ஓடினர்.
ஒரு இளைஞன் தண்ணீர் பாட்டில் கொண்டு வந்து அந்தக் கிழவியின் முகத்தில் தெளிக்க, மெல்லக் கண் விழித்தாள்.
"என்ன கிழவி.. கொளுத்தற இந்த வெயில்ல எங்க கிளம்பிட்டே?... வீட்டோட கிடக்க வேண்டியதுதானே?" ஒரு இளைஞன் சொல்ல,
"ஒரு முக்கியமான வேலையாப் போயிட்டிருக்கேன்" கிழவி சொன்னாள்.
"சரி... சரி... உடனே கிளம்பிடாதே.. கொஞ்ச நேரம் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்திடுப் போ..." என்றான் இன்னொரு இளைஞன்.
"இல்லப்பா லேட்டாயிடும்... நான் உடனே போகணும்"
"அப்படி எங்க போறே... ஃப்ளைட் பிடிக்கவா?" ஒருவன் சொல்ல மற்றவர்கள் சிரித்தனர்.
"ஓட்டுப் போடப் போயிட்டிருக்கேன்ப்பா"
"என்னது ஓட்டுப் போடவா?... காலம் போன கடைசில உனக்கு இது தேவையா கிழவி?"
"வாயை மூடுடா... நான் இந்த நாட்டோட குடிமகள்... எனக்கான அரசைத் தேர்ந்தெடுக்க எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கற ஜனநாயக உரிமை... பெற்ற தாய்க்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கற மாதிரி... தாய்நாட்டுக்கும் நீ செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு... அதைச் செய்தால்தான் நீ இந்நாட்டுக் குடிமகன்... இல்லேன்னா நீ வெத்து ஆளு... செத்த ஆளு!"
சொல்லி விட்டு பூத்தை நோக்கி, தடியை ஊன்றிக் கொண்டே கிழவி செல்ல,
"டேய்... இந்த முறை நாமும் ஓட்டுப் போடலாம்டா" என்றான் ஒரு இளைஞன்.
மற்றவர்கள் மறுப்பின்றி ஏற்றுக் கொண்டனர்.
(முற்றும்)

முகில் தினகரன்,
கோயமுத்தூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?