இரவு ஏழு மணி.
திண்ணையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தாள் சிறுமி கங்கா. அப்போது அவளது தந்தையைத் தேடி வந்த சிலர் அவரிடம் எதையோ ரகசியமாய் கேட்க, அவரும் தலையசைத்தபடி அவர்களை வீட்டின் பின்புறம் அழைத்துச் செல்ல, கங்காவுக்கு எதுவுமே புரியவில்லை.
சில நிமிடங்களில் அந்த நபர்கள் கையில் எதையோ மறைத்து மறைத்து எடுத்துச் செல்ல, அவர் தந்தை கை நிறைய பணத்துடன் வீட்டினுள் சென்றார்.
"என்ன நடக்குது இங்கே?... அவங்க எதுக்கு வந்தாங்க?... இவர் என்ன கொடுத்தார் அவங்களுக்கு?... அவங்க ஏன் அதை மறைத்து மறைத்து எடுத்திட்டுப் போறாங்க?" குழப்பத்தில் ஆழ்ந்தவளால் மேற்கொண்டு படிக்க இயலவில்லை.
அடுத்த வாரத்தில் ஒரு நாள்,
ஊருக்குள் ஏழெட்டு பேர் கள்ளச்சாராயம் அருந்தி இறந்து விட, போலீஸ் வீடு வீடாய்ச் சென்று சோதனை போட்டது.
எங்கும் எதுவும் கிடைக்கவில்லை.
இன்ஸ்பெக்டர் ஊருக்கு நடுவில் நின்று பேசினார். "இதப் பாருங்க.. இந்த ஊர்ல கள்ளச்சாராய நடமாட்டம் அமைதியாக நடந்திட்டிருக்கு... யார் விற்கிறார்கள்?... எங்கே வைத்து விற்கிறார்கள்?... எதுவுமே தெரியலை!... யாருக்காவது இதைப் பற்றி ஏதாவது தகவல் தெரிஞ்சா... தைரியமா வந்து போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லுங்க!.. நிச்சயம் உங்களுக்கு ரிவார்ட் கிடைக்கும்"
அவர் சொல்லிச் சென்று ஒரு வாரமாகியும் எந்தவிதத் தகவலோ... தடயமோ... அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
அன்று பள்ளி ஆண்டு விழா.
அந்த விழாவில் சிறுமி கங்கா ஜான்சி ராணி வேடத்தில் நடிக்கப் போகிறாள்.
அதற்காக அதிகாலையில் சற்று சீக்கிரமாகவே எழுந்து குளிப்பதற்காக பாத்ரூம் சென்றவள் அங்கே ஏற்கனவே அவளுடைய தாய் குளித்துக் கொண்டிருப்பதை கண்டு கோபமானாள். "அய்யய்யோ...அம்மா... இன்னைக்கு நான் சீக்கிரம் போகணுமே!" கத்தினாள்.
"ஏய்...ஏண்டி கத்தறே?... பக்கத்தில் உங்க அப்பா பாத்ரூம் இருக்குதுல்ல அதுல போய்க் குளி" என்றாள் தாய் பாத்ரூமுக்குள் இருந்தபடி.
அதற்காகவே காத்திருந்தவள் போல் கங்கா அப்பாவின் பாத்ரூமிற்குள் நுழைந்தாள். அந்த பாத்ரூமில் உள்ள சிறிய தொட்டியில் நீர் நிறைந்திருக்க ஆவலோடு அதனுள் பக்கெட்டை விட்டவள் அதனுள்ளிருந்து "க்ளிங்...க்ளிங்" என்று சத்தம் கேட்க, உள்ளே எட்டிப் பார்த்தாள்.
தண்ணீருக்கு அடியில், பாலித்தீன் கவருக்குள் அடைக்கப்பட்டிருந்த சாராய பாட்டில்களைக் கண்டு நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தாள்.
"அப்படின்னா... ஊருக்குள் கள்ளச்சாராயம் விற்பது என்னுடைய அப்பாவா?"/நொந்து போனாள்.
ஆண்டு விழா நிகழ்ச்சி சரியான நேரத்தில் துவங்கி விட, ஜான்சி ராணி வேடத்தில் முதுகில் குழந்தைக்கு பதிலாய் ஒரு பொம்மைக் குழந்தையைச் சுமந்து கொண்டு, பெரிய மரக்கட்டைக் குதிரை மீது அமர்ந்து வாள் சுழற்றினாள் கங்கா.
அந்த வினாடியில் அவளுக்குள் ஜான்சி ராணியே புகுந்துவிட வீராவேசமானாள்.
ஆசிரியர் சொல்லிக் கொடுத்த வசனங்களை அனல் பறக்கப் பேசினாள்.
நாடகம் முடிந்து மேடையை விட்டுக் கீழே இறங்கியவள் அதே ஜான்சி ராணி வேடத்தில் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்தாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் கங்காவின் தந்தையைக் காவல்துறை கைது செய்ய, அவள் தாய் மகளைத் திட்டித் தீர்த்தாள்.
"அம்மா... நான் அப்பாவை சிறைக்கு அனுப்பியதை மட்டும்தான் உனக்குத் தெரியுது... எதிர்காலத்திலே உயிரை இழக்க காத்திருக்கிற பல அப்பாக்களை அந்தக் கள்ளச் சாராயத்திலிருந்து நான் காப்பாற்றி இருக்கிறேன்... அதையும் புரிஞ்சுக்கோ!" என்றாள் ஜான்சிராணியாய் வாளைச் சுழற்றிபடியே.
(முற்றும்)
முகில் தினகரன்
கோயம்புத்தூர்.