இப்படியும் ஒரு மனிதன்....!

இப்படியும் ஒரு மனிதன்....!


ஒரு வாரமாகவே சீனிவாசன் இரண்டு புதிய மின்விசிறிகளை வாங்கி வைத்துக் கொண்டு அதை மாட்டுவதற்கு எலக்டிரிசீயனை தேடிக் கொண்டிருந்தார். 

தனக்கு தெரிந்த இரண்டு எலக்ட்ரிசீயனுக்கும் கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இருவருமே இப்போது நாங்கள் வெளியூரில் வேலை செய்து கொண்டு இருப்பதாக தெரிவித்து விட்டார்கள். 

நண்பர்கள் வாசுதேவன், மகாலிங்கம் ஆகிய இருவரிடமும் சொல்லிப் பார்த்து விட்டார். 

இந்த சின்ன வேலைக்கெல்லாம் யாரும் அவ்வளவு சீக்கிரமா வரமாட்டாங்க என்று வாசுதேவன் சீனிவாசனிடம் தெரிவித்துவிட்டார்.

சின்ன வேலைன்னு சொன்னாலும் கூலியை குறைச்சா வாங்குவாங்க.... இரண்டு பேன் மாட்டுறதுக்கு குறைச்சலா அய்நூறு ரூபாய் கேட்பாங்களே.. என்றார் சீனிவாசன். 

வேலை கிடைக்கலேன்னு சொல்லிகிட்டு டீ கடையில உட்கார்ந்து கதை பேசிக்கிட்டு கிடப்பானுங்களே தவிர கிடைச்ச வேலையை செஞ்சுட்டு நியாயமா கூலி வாங்குவோம்னு எந்த வேலை செய்யறவங்களும் நினைக்கிறதில்ல... அப்படியே வேலை கிடைச்சாலும் அய்நூறு ஆயிரம்னு கூலி கேட்டு வம்பு பண்ணுவாங்க.... என்று வாசுதேவன் பதிலுக்கு பேசினார். 

என்னாங்க... வாங்கி வச்சிருக்கிற பேன் இரண்டையும் எப்ப மாட்டப் போறீங்க? மேல இருக்குற பேன் ஸ்பீடாவே ஒட மாட்டேங்குது! சரியா காத்தும் வரலை... என்று புலம்பினாள் சீனிவாசனின் மனைவி மரகதம். 

அதுக்குதான் அலையறேன்னு உனக்குத் தெரியாதா? எலெக்டிரீசியன் யாரும் கிடைக்கல... தேடிக்கிட்டு தான் இருக்கேன்... 

உங்க பிரண்ட் மகாலிங்கத்துகிட்ட கேட்கலாமுல்ல... அவருதான் எல்லாருகிட்டையும் தொடர்பு வச்சிருப்பாரே! 

மகாலிங்கம், ‌வாசு ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லி வச்சிருக்கேன்... ஆனா இந்த மாதிரி சின்ன வேலைக்கெல்லாம் ஆள் கிடைக்கறது கஷ்டமா இருக்குன்னு அவங்களே சொல்றாங்க! 

பார்ப்போம்... என்று அலுத்துக் கொண்டே சொன்னார் சீனிவாசன்... 

அன்று ஞாயிற்றுக்கிழமை.. சீனிவாசன், ‌தனது வீட்டு மொட்டை மாடியில், துவைத்த துணிகளை உலர்த்தி க்கொண்டிருந்தார். 

அப்போது அவர் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கைபேசி அலறியது. 

கைபேசியை எடுத்து ஹலோ என்றார். 

நான் எலெக்ட்ரீசியன் மாரிமுத்து பேசறேன்.. நீங்க சீனிவாசன் சார் தானே... மகாலிங்கம் சார் தான் உங்க நம்பரைக் கொடுத்தாரு.... ஏதோ எலக்ட்ரிக் வேலை உங்க வீட்டில இருக்குன்னு சொன்னீங்களாமே! 

ஆமாம்! நான் தான் சொல்லியிருந்தேன்... வீட்டில இரண்டு பேன் மாட்டனும்... எப்ப வருவீங்க? 

பேன் மட்டும் தான் மாட்டனுமா? வேற வேலை இல்லையா? 

இரண்டு பேன் மட்டும் தான் மாட்டனும்... என்றார் சீனிவாசன். 

சார்... உங்க அட்ரஸை சொல்லுங்க...! 

சரியாக முப்பது நிமிடங்கள் கழித்து சீனிவாசனின் வீட்டு வாசலில் எலெக்ட்ரீசியன் மாரிமுத்து இருசக்கர வாகனத்தில் வந்து விட்டார். 

மாரிமுத்துவுக்கு சுமார் 50‌ வயது இருக்கும். 

இந்த அறையில இருக்குற பேனை கழட்டிட்டு, இந்த புது பேனை மாட்டனும். அதேமாதிரி மாடியில இருக்குற அறையில மாட்டி இருக்கிற பழைய பேனை கழட்டிட்டு புதுசை மாட்டனும்.. 

மாரிமுத்து அதற்கப்புறம் எதுவும் பேசவில்லை. 

கீழ் அறையிலுள்ள பேனை கழட்டிட்டு புது பேனை மாட்டும்போது அவராகவே முக்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டார். 

நான் ஏதாவது உதவி செய்யனுமா என்று சீனிவாசன் கேட்டதற்கு கூட; இல்லை சார்... நானே பார்த்துப்பேன்... நீங்க சும்மா இருங்க... என்றார் மாரிமுத்து. 

மாடியிலுள்ள அறைக்கு பேன் மாட்டுவதற்கும், மாரிமுத்துவே முக்காலியை எடுத்துச் சென்றார். 

ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு பேனையும் மாட்டிக் கொடுத்து விட்டார். 

தண்ணீர் சாப்பிடுறீங்களா? 

என்று சீனிவாசன் கேட்டதும் வேணாம் சார்... நானே பாட்டிலில் கொண்டு வந்திருக்கேன்.. என்றபடியே தான் கொண்டு வந்திருந்த உபகரணங்களை பைக்குகள் எடுத்துப் போட்டுக் கொண்டு புறப்படுவதற்கு தயாராக இருந்தார். 

கொஞ்சம் உட்காருங்கள்... என்று நாற்காலியை சுட்டிக் காட்டினார்.. சீனிவாசன். மாரிமுத்து நாற்காலியில் உட்கார்ந்து கைபேசியை பார்த்து க் கொண்டிருந்தார். 

சீனிவாசன் 500 ரூபாய் தாளை கொண்டு வந்து மாரிமுத்து விடம் நீட்டினார். 

அதை மாரிமுத்து வாங்காமலேயே பதற்றத்துடன் ஏன் சார் இவ்வளவு பணம்? 

இவ்வளவு வேண்டாம் சார்... 

நானும் என் மனைவியும் மட்டும் தான் இருக்கிறோம். 

பையன்கள் இரண்டு பேரும் வெளியூர்ல நல்ல வேலையில இருக்காங்க... எனக்கு 300 ரூபாய் மட்டும் கொடுங்க அது போதும் சார் என்றார்.. 

பரவாயில்லை.. வச்சுக்குங்க... என்று சீனிவாசன் திரும்பவும் சொன்னார்... 

வேண்டாம்... எனக்கு 300 மட்டும் கொடுங்க... என்று பிடிவாதமாக தெரிவித்தார்.

மாரிமுத்து கேட்டபடி சீனிவாசன் 300 ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார். 

அதை வாங்கி கொண்டு, நான் புறப்படறேன்.. என்றபடி மாரிமுத்து புறப்பட்டு சென்றார்.. 

இந்த காலத்திலும், 

இப்படி ஒரு மனிதனா! என்று மனசுக்குள் சொல்லியபடி சீனிவாசன் அதிசயித்து நின்றார்..! 

--------------------------------


ஆக்கம்:

தமிழ்ச் செம்மல் 

நன்னிலம் இளங்கோவன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%