
-பாவலர் கருமலைத்தமிழாழன்
ஏவுகணை விஞ்ஞானி என்றே ஞாலம்
ஏத்திபுகழ் பாடிட்ட அப்துல் கலாம்தான்
தாவுமன ஆசையின்றிக் குறிக்கோ ளோடு
தன்கடமை செய்திட்ட நேர்மை யாளர் !
மேவுபுகழ் பெரிதாக இருந்த போதும்
மேதையெனும் ஆணவம்தான் சிறிது மின்றிக்
கூவுகுரல் ஏழைக்குச் செவிம டுத்துக்
குனிந்தவரை அருகழைத்தே அணைத்த செம்மல் !
தன்னலமே இல்லாத உண்மை யாளர்
தன்னழைப்பால் உயர்ந்திட்ட எளிமை யாளர்
நன்நிலையில் நாடுயர மாண வர்கள்
நற்கனவு காணவேண்டும் என்று ரைத்தோன் !
நன்றாக இவர்பண்பை அறிந்த தாலே
நாட்டிலுள்ள அரசியலார் ஒன்று சேர்ந்து
பொன்னான குடியரசுத் தலைவ ராக்கிப்
பொறுப்புதனை அளித்தார்கள் எதிர்ப்பே யின்றி !
குடியரசு மாளிகைக்குள் நுழைந்த போது
கொண்டுசென்ற ஒருசிறிய பெட்டி யோடே
குடியரசு வீட்டைவிட்டு வந்த போது
குடியரசு மாளிகையின் தூசு கூடப்
படிந்திருக்கக் கூடாதென் றதனின் மீது
பாய்ச்சிநீரை தூய்மைசெய்து வெளியே வந்த
மடிக்கணமே இல்லாத கலாமைப் போன்ற
மாமனிதர் வேறுண்டோ இந்த நாட்டில் !
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?