பொ.வெ.இராஜகுமார்.
“டேய்! எழுந்திரிடா! மணி ஏழரையாகப்போகுது! இன்னிக்கு நம்ம தூரத்து சொந்தக்காரப் பொண்ணைப் பார்க்கப் போகனும். மறந்துட்டியா!”
அம்மா! தலைப்பாரத்தில், கண்களைத் திறக்க முடியாமல் கூச, மீண்டும் இமைகளை இறுக்க மூடிக்கொண்டான், வாசு. பெண்பார்க்கும் படலம், இது எட்டாவது!
இந்த அம்மாவுக்கு, தன்னை ஒரு பொண்ணு தலைல கட்டி வைச்சிட்டா அவங்க ரிபோர்ட் கார்டுல ஒரு டிக் விழுந்துடும். அவ்வளவு தான், அவங்க கடமை முடிஞ்சுது. வேண்டாவெறுப்பாக கட்டிலை விட்டு கீழிறங்கி, பாத்ரூம் பக்கம் போனான்.
“டேய்! இந்தப் பொண்ணையும் பார்த்துட்டு, அது சரியில்லை, இது சரியில்லைன்னு தட்டிக் கழிச்சுடாதடா! நல்ல குடும்பத்து பொண்ணு! வில்லேஜ் கல்சர்டா! சிட்டில pub, மால்ன்னு சுத்தற பொண்ணு இல்லடா! புரிஞ்சுக்கோ!” - காரில் அம்மா!
‘நகரத்துப் பொண்ணுன்னா அவ்வளவு இளக்காரமா? அவங்களுக்கு இருக்குற அறிவுக்கும், அழகுக்கும், சரிசமமா எல்லோரையும் மதிச்சு பழகுற விதமும், அவுங்க படிச்ச படிப்புக்கு செய்யுற வேலையில, அவங்களோட வேகமும், திறமையும், உழைப்பும் யாருக்கு வரும். பார்க்கப்போற இந்த கிராமத்து பொண்ண வச்சிக்கிட்டு, சிட்டில, நான் எப்படி பொழைக்கிறது?’ மனதுக்குள் புலம்பிக் கொண்டான், வாசு.
இந்தவரனையும் வேண்டாம்னு சொல்ல காரணத்தை தேட ஆரம்பித்துவிட்டான்.
நகரத்தை தாண்டி, வயல்வெளியோட சில்லுன்னு காத்து காதுல பட, வந்து சேர்ந்தார்கள்.
ஓடோடி வந்து வரவேற்றார் பொண்ணோட அப்பா!
“தங்கச்சி! எங்க நல்ல நேரம் போயிடுமோன்னு பயந்திட்டு இருந்தேன்! சரியானநேரத்துக்கு வந்துட்ட! வாங்க மாப்ள!” வாயெல்லாம் பல்லாக அவர்.
காரைவிட்டு இறங்கி, ஒரு பழைய மஞ்சள் கலர் பெயிண்ட் அடித்த ஒற்றை மாடி வீட்டிற்குள்போனார்கள், பழைய இரும்பு நாற்காலிகள் இழுத்துப்போடப்பட, அமர்ந்தான் வாசு.
பழங்காலத்து மனிதர்களின் வாசம் மூச்சடைக்க, “அண்ணா! நேரத்த வேஸ்ட் பண்ணாம, பொண்ணை வரச்சொல்லுங்கோ! வடை, பலகாரம்லாம் நிதானமா அப்புறமா சாப்பிடலாம்”, என்றாள், அம்மா.
மெல்லிய ஊதா கலரில், காட்டன் புடவையோடு ஹாலுக்கு வந்து எங்களை யெல்லாம் வணங்கிவிட்டு, கீழே விரித்த பாயில், வந்து அமர்ந்தாள், கிருத்திகா, புது மணப்பெண்.
அவளின் குனிந்த தலைக்கும் கீழே சென்று தேடின, அவனின் கண்கள். மாநிறந்தான் என்றாலும், ஒப்பனையில்லாத முகத்தில், இனந் தெரியாத ஒரு வசீகரம், அது, அது.. அவளின் கண்களில் நிறைந்திருந்த சாந்தம். அது என்னவோ செய்தது அவனுக்குள்.
திரும்பி அம்மாவைப் பார்த்தான். “என்னடா? பொண்ணுகிட்ட தனியாப் பேசனுமா? போய் பேசுடா! அம்மா கிருத்திகா! எம் பையனுக்கு உன்னோட பேசனுமா. போய்ப்பேசு. அண்ணா! உனக்கு ஏதும் பிரச்சினை இல்லையே!” என்றாள், அம்மா!
“இதில என்ன இருக்கும்மா! செல்லம் போய்பேசிட்டு வாடா!” என்றார் பெண்ணோட அப்பா, சாம்பசிவம். தயக்கத்தோடு எழுந்த அவள், வீட்டிற்குப் பின்னால் உள்ள தோட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்றாள்.
அவளைப் பின் தொடர்ந்தான் வாசு. “என்ன படிச்சிருக்கீங்க?”
“அக்ரி ஸயன்ஸ்ல எம்.எஸ். முடிச்சுட்டு, டாக்டரேட் பட்டத்திற்கு படிச்சுட்டு இருக்கேன்”, என்றாள் அவள். சற்றே திகைத்தாலும், அக்ரி சயின்ஸ் படிச்சவளுக்கு சிட்டில என்ன வேலை கிடைக்கும்னு யோசித்தான், அவன்.
“ஓ, வெரி குட்! உங்க ஹாபி என்ன? படிப்பதத் தவிர..” கேட்டான் வாசு.
“கார்டனிங் தான்! இதோ, இந்த தோட்டத்தில் இருக்கிற ஒவ்வொரு பூஞ்செடியும், என்னோட சொந்தம் தான். ஒவ்வொரு செடிக்கும், ஒவ்வொரு பெயர் வைத்திருக்கிறேன், தெரியுமா? எதையும் எதிர்பார்க்காமல், ஒரு செம்பு நீர் ஊற்றினால், அதிஅற்புதமான நிறங்களில், மணத்தில், குலுங்கும் மலர்களைப் பரிசாக, தினந்தினம் அளிக்கும் கற்பக விருட்சங்கள்! இறையின் அருளை மனிதருக்கு ஞாபகப்படுத்தும், இச்செடிகளாய்ப் பிறப்பதற்கு என்னதான் தவம் செய்தனவோ! ஆ! என் ரோஜா ரத்தினமே! உன்னை காலை வெய்யில் என்னமாய் காயப்படுத்துகிறது! இதோ! வந்துவிட்டேன்!” என்றவள், என்னை நோக்கித் திரும்பி, “ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு, அந்த ரோஜா செடியிடம் ஓடிப்போனாள்.
சரிந்து விழுந்திருந்த தட்டியை நிமிர்த்தி, அந்த ரோஜா செடி மேல் படாமல், சுடும் வெய்யிலை மறைத்து, சுவரில் சாய்த்துவைத்தாள். “இப்போ பரவாயில்லையா? அக்னி வெய்யில் உன்னைச் சுட்டதா, என் தங்கமே!” என்று அந்த ரோஜாவை, தன் கன்னத்தோடு இதமாக இழைத்துக் கொஞ்சினாள், அவள்.
திகைத்துப் போய் பார்த்துக்கொண்டிருந்தான், வாசு. “ஓ, உங்கள மறந்துட்டேன். நீங்க என்ன கேட்டீங்க?” என்று கேட்டாள், கிருத்திகா.
“ஆ! அதெல்லாம் ஒண்ணுமில்ல. நாம திரும்பி போலாமா?”, என்றான் வாசு, அவளை அதிசயமாய்ப் பார்த்துக் கொண்டே..
திரும்பி வந்த ஜோடியை வரவேற்ற அவனின் அம்மா, “அண்ணா! உங்க பொண்ண எங்களுக்கு ரொம்பவும் பிடிச்சுருக்கு. மேற் கொண்டு ஆக வேண்டியதைப் பேசலாமா?” என்றாள்.
“ஆஹா! பேஷா பேசலாமே! எதுக்கும் மாப்பிள வாயைத் தொறந்து எங்க பொண்ண புடிச்சிருக்குன்னு சொன்னா நாங்கள்ளாம் சந்தோஷப்படுவோம்” என்றார் சாம்பசிவம்.
சிறிய கலவரத்தோடு அவன் முகத்தைப் பார்த்தாள், அவனின் அம்மா. அவன் அவளை வைத்தகண் வாங்காமல், “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கும்மா!” என்றான் வாசு.
வெள்ளையாகச் சிரித்து தலை கவிழ்ந்தாள், கிருத்திகா.
**********