ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் நோ கோல்ட் வார் அமைப்பு எச்சரிக்கை
டெஹ்ரான், ஜூலை 17-
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரே லும் மீண்டும் தாக்குதல் நடத்தும் என “நோ கோல்ட் வார்” அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முற்றிலுமாக அழிப்பதற்காக நடத்திய தாக்குதல்கள் தோல்வியடைந்த நிலையில் ஈரான் மீது அந்நாடுகள் மீண்டும் தாக்குதல் நடத்தும். அந்த தாக்குதலுக்கு அதிக காலம் எடுக்காது. எனினும் இந்த இரண்டாவது தாக்குதல் முயற்சியில் அவர்கள் வெற்றி பெறுவார்களா இல்லையா என்பது ஈரானின் எதிர்ப்பு மற்றும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான பிற நாடுகளின் ஒன்றுபட்ட ஆதரவைப் பொறுத்ததே என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன நிலத்தை ஆக்கிர மித்துள்ள, இஸ்ரேல் ஒருநாடாக உலகள வில் அங்கீகரிக்கப்படவில்லை. மேற்கு ஆசியா, வட ஆப்பிரிக்கப் பகுதிகளில் உள்ள நாடுகளை மிரட்டி பணிய வைக்க வும் அதன் மூலம் அப்பகுதியில் உள்ள எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளை யடிக்கவும் அமெரிக்காவின் அடியாளா கவும் ராணுவ நிலையாகவுமே இஸ்ரேல் உள்ளது. இந்நிலையில் அப்பிராந்தியத்தில் ஈரானின் வலிமையை மேலும் அதி கரிக்கும் வகையில் பிரிக்ஸ் கூட்டணி செயல்படுகிறது. இந்தப் பொருளாதாரக் கூட்டணி அமெரிக்காவையும் அதன் டாலர் ஆதிக்கத்தையும் பலவீனப்படுத்தும் வேலையை படிப்படியாக அதிகரித்து வருகின்றது. மேலும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளை மட்டுமே நம்பி இருப்பதற்கு மாற்றான ஒரு பொருளாதாரக் கூட்டணியை உரு வாக்கியுள்ளது. அப்பிராந்தியத்தில் ஈரான் மட்டுமே இஸ்ரேலையும், அமெரிக்காவையும் உறுதியாக எதிர்க்கும் நாடாக உள்ளது. அதனை தகர்ப்பதற்காக இராக், லெப னான், சிரியா போன்ற நாடுகளைப் போல, ஈரானிலும் ஆட்சியை கவிழ்க்கும் வேலை களை அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுத்து வருகின்றன. காசா, லெபனான் மற்றும் சிரியாவில் ஈரான் ஆதரவுடன் இயங்கி வருகின்ற இஸ்ரேல் எதிர்ப்பு ராணுவக் குழுக்களின் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்கு தல் நடத்தி அக்குழுக்களின் போர்த் திறனை திட்டமிட்டு குறைத்த பிறகு, பாலஸ்தீனர்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த ஆதரவாளராக உள்ள ஈரான் மீது தாக்கு தல் நடத்த வேண்டும் என்ற நேதன்யாகு வின் நீண்டகால திட்டம் அரங்கேற் றப்பட்டது. இத்தகைய சூழலில் ஈரானின் அணு உலைகளை அழிப்பதன் மூலமாக அதன் வளர்ச்சியை அழிக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் எடுத்த முயற்சி படுதோல்வி யடைந்துள்ளது. டிரம்ப் ஈரானின் அணு ஆராய்ச்சி கட்டமைப்புகளை முழுமையாக அழித்து விட்டோம் என கூறினாலும் அமெரிக்கா வின் தீவிர ஆதரவுடன் செயல்படுகிற ஊட கங்களே அது உண்மையல்ல என கூறி யுள்ளன. ஈரானும் எங்கள் அணு ஆராய்ச்சி கட்டமைப்பு முழுமையாக அழிக் கப்படவில்லை; ஆனால் சேதமடைந்துள் ளது. அதனை எங்களால் மீண்டும் முழுமையாக மறுகட்டமைப்பு செய்து விட முடியும் என தெரிவித்துள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பு பொருளாதார ரீதியாக ஈரானுக்கு ஆதரவாக இருக்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் அவற்றின் இலக்குகளை அடையவில்லை. இத னால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரண்டாவது முறையாக ஈரானை தாக்கும். ஒருவேளை அந்த தாக்குத லில் அமெரிக்கா ஜெயித்தால் அப்பிராந்தி யத்தில் இஸ்ரேல் ஆட்சியை மேலும் பலப்படுத்தும். இதன் மூலமாக மேற்கு ஆசியாவில், தன்னை எதிர்த்து நிற்கும் அனைத்து நாடுகளையும் இஸ்ரேல் மூலம் அமெரிக்கா வழக்கம் போல அச்சுறுத்தும். குறிப்பாக ஈரான் மீதான தாக்குதல் மூலமாக பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு ஒரு பெரிய பாதிப்பை உருவாகும் என “நோ கோல்ட் வார்” வெளியிட்டுள்ள அறிக் கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.