உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த பி.ஆர். கவாயின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இதற்கான விழாவில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அரசியலமைப்பை காப்பேன் என்றும், கடமைகளை உண்மையாக நிறைவேற்றுவேன் என்றும் இந்தியில் கூறி சூர்யகாந்த் பதவியேற்றார். இதையடுத்து, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
கடந்த 1962-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி ஹரியானாவின் ஹிசார் பகுதியில் சூர்யகாந்த் பிறந்தார். ஹிசாரில் பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பை நிறைவு செய்த அவர் ரோத்தக் மற்றும் குருஷேத்திரா பல்கலைக்கழகத்தில் எல்எல்பி, எல்எல்எம் சட்டப் படிப்புகளை படித்தார்.
கடந்த 1984-ம் ஆண்டில் ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகபணியை தொடங்கினார். பின்னர் பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2000-ம் ஆண்டில் ஹரியானா அட்வகேட் ஜெனரலாக அவர் நியமிக்கப்பட்டார். கடந்த 2004-ம் ஆண்டில் பஞ்சாப்- ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். கடந்த 2018-ம் ஆண்டில் இமாச்சல பிரதேச தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். கடந்த 2019-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவர் பதவியேற்றார்.
1,000 வழக்குகளில் தீர்ப்பு: உயர் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை சுமார் 1,000 வழக்குகளில் அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார். குறிப்பாக 370-வது சட்டப்பிரிவு, தேசத்துரோக சட்டம், பெகாசஸ் வழக்கு, பிஹார் எஸ்ஐஆர் வழக்குகளில் அவர் முக்கிய தீர்ப்புகள், உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சனிக்கிழமை நீதிபதி சூர்யகாந்த் பேசியபோது, “நவம்பர் 24-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளேன். எனது பதவிக் காலத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுப்பேன். நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கி உள்ளன. இந்த எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று தெரிவித்தார். புதிய தலைமை நீதிபதி சூர்ய காந்துக்கு சவிதா என்ற மனைவியும் முக்தா, கனுபிரியா என்ற இரு மகள்களும் உள்ளனர்.