ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி கைது: ரூ. 5 கோடி ரொக்கம், ஆடம்பர கார்கள் பறிமுதல்
Oct 18 2025
18

பஞ்சாப் டிஐஜி ஹர்சரண் சிங் புல்லருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம்
சண்டிகர்: ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சிபிஐ, அவரிடம் இருந்து ரூ. 5 கோடி பணம், இரண்டு ஆடம்பர கார்கள், 1.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளது.
இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் 2009 பேட்ச்-ஐ சார்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரண் சிங் புல்லர் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பஞ்சாப் காவல்துறையில் டிஐஜி பொறுப்பில் இருக்கிறார்.
ரூ. 8 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் தனி நபர் ஒருவருடன் சேர்த்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழில் நடத்தும் ஒருவரிடம், அந்த தனி நபர் ஹர்சரண் சிங் புல்லர் சார்பாக அந்த லஞ்சப் பணத்தைப் பெற்றபோது அவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். லஞ்சம் கொடுத்தவர் ஏற்கெனவே கொடுத்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புகார்தாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தான் தீர்த்து வைப்பதாகவும், அவரது தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் பதிலுக்கு இடைத்தரகர் மூலம் மாதம்தோறும் ரூ. 8 லட்சம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும் என்றும் ஹர்சரண் சிங் புல்லர் கூறியுள்ளார்.
ஹர்சரண் சிங் புல்லர் தொடர்புடைய பஞ்சாப் மற்றும் சண்டிகரில் உள்ள பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் தோராயமாக ரூ. 5 கோடி பணம், 1.5 கிலோ தங்க நகைகள், இரண்டு சொகுசு வாகனங்கள், 22 ஆடம்பர கைக்கடிகாரங்கள், 40 லிட்டர் இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
குற்றவாளிகள் இருவரும் அக்டோபர் 17 (இன்று) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். தொடர்ந்து தேடுதல் பணிகளும் விசாரணைகளும் நடத்தப்பட்டு வருகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?