ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் அவதிப்பட்ட பயணிகள்

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் அவதிப்பட்ட பயணிகள்


புதுடெல்லி: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி ரயில் டிக்கெட்களை புக் செய்துகொண்டிருந்த நிலையில் இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதியடைந்தனர்.


தீபாவளிக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி ஏராளானோர் ரயில் டிக்கெட்களை புக் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சுமார் 10.45 மணி அளவில் ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியது. இதனால், ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பலரும் அவதிக்கு உள்ளாகினர். குறிப்பாக தட்கல் மூலம் முன்பதிவு செய்ய முயன்றவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.


தொழில்நுட்பக் கோளாறால் இந்த இடையூறு ஏற்பட்டதாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இணையதளம் மீண்டும் இயங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர். ஒரே நேரத்தில் அதிகப்படியான பேர்கள் பயன்படுத்தியதால் இணையதளம் முடங்கியதாகக் கூறப்படுகிறது.


இதனிடையே, ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாத விரக்தியில் பலரும் ஐஆர்சிடிசி இணைய தளம் முடங்கியது குறித்த ஸ்கிரீன்ஷாட்டை எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வேதனை தெரிவித்தனர். பகல் 12.15 மணி அளவில் ஐஆர்சிடிசி இணைய தளம் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது. எனினும், பல ரயில்களுக்கான டிக்கெட்டுக்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.


பண்டிகைக் காலங்களில் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்குவது இது முதல்முறையல்ல. ஒரே நேரத்தில் அதிகப்படியானோர் இணையதளம் அல்லது ஆப்பில் டிக்கெட்டுக்களை புக் செய்ய முயல்வதால் இதுபோன்ற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ள ரயில்வே அதிகாரிகள், இதுபோன்ற நேரங்களில் நேரடி முன்பதிவுகள், பயண முகவர்கள் மூலமான முன்பதிவுகளுக்கு முயலலாம் என கூறியுள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%