ரூ.4,100 கோடியில் இலகு ரக ஏவுகணை வாங்க இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்
புதுடெல்லி: ரூ.4,100 கோடியில் இலகு ரக பன்னோக்கு ஏவுகணை வாங்க இங்கிலாந்து நிறுவனத்துடன் இந்திய ராணுவம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தார். மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியும் ஸ்டார்மரும் சந்தித்துப் பேசினர். அப்போது, பாதுகாப்புத் துறை உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
இதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்தின் தாலஸ் குழுமத்திடமிருந்து இலகு ரக பன்னோக்கு ஏவுகணைகளை (எல்எம்எம்) வாங்குவது தொடர்பாக, அந்த நிறுவனத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே நேற்று முன்தினம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, 8 லாஞ்சர்கள் மற்றும் 50 எல்எல்எம்களை தாலஸ் நிறுவனம் இந்திய ராணுவத்துக்கு வழங்கும்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும். சுயசார்பு இந்தியா இலக்கை அடைவதில், இது பாதுகாப்பு அமைச்சகத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும். இதன்மூலம் இரு நாடுகளும் ராணுவ தளவாட துறையில் நீண்டகால ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ளும்” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலே கூறும்போது, “இந்தியாவுடன் வளர்ந்து வரும் கூட்டாண்மை, இங்கிலாந்தின் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பை எப்படி ஊக்குவிக்கும் என்பதை எடுத்துக் காட்டும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. இது இரு நாடுகளின் பாதுகாப்பு துறைகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும். குறிப்பாக, கடற்படை கப்பல்களுக்கு மின் இன்ஜின்கள் உருவாக்கத்திலும் வான் பாதுகாப்புத் துறையிலும் இது உதவும்” என்றார்.
இந்த ஏவுகணையின் எடை வெறும் 13 கிலோதான் என்பதால், போக்குவரத்து வசதி இல்லாத உயரமான மலைப் பகுதிகளுக்கு கையிலேயே எளிதாக சுமந்து செல்ல முடியும். இது லேசர் கதிரை வழிகாட்டியாகக் கொண்டு துல்லியமாக தாக்கும். இதில் சக்தி வாய்ந்த வெடிகுண்டும் சிறப்பு ப்யூசும் உள்ளன. 6 கிலோ மீட்டருக்கு அப்பாலும், எதிரிகளின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிராக செயல்படும்.