எங்கள் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்துள்ளது என்டிஏ” - தேஜஸ்வி விமர்சனம்
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி தங்கள் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்ட நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் தங்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவை என தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், "அவர்கள் எல்லாவற்றையுமே காப்பி அடிக்கிறார்கள். அவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் எங்கள் தேர்தல் அறிக்கையைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவையே.
சமீபத்தில் நாங்கள் வெளியிட்ட எங்கள் தேர்தல் அறிக்கையில், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். அப்போது, ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு எவ்வாறு அரசு வேலை வழங்க முடியும்; அவ்வளவு வேலை வாய்ப்பை எப்படி உருவாக்க முடியும் என்று எங்களைப் பார்த்து கேள்வி கேட்டார்கள். தற்போது அவர்கள் ஒரு கோடி பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்கள். இதை எவ்வாறு செயல்படுத்துவார்கள் என்பது குறித்து தற்போது அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
பிஹாரில் 20 ஆண்டுகளாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சிதான் இருக்கிறது. இருபது ஆண்டுகள் அவர்கள் ஆட்சி செய்தும் பிஹார், ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாகவே உள்ளது. மாநிலத்தில் தொழிற்சாலைகள் இல்லை. முதலீடுகள் வரவில்லை. அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துவிட்டது. அவர்கள் பொய் வாக்குறுதிகளையே மீண்டும் அளிக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், மருத்துவர்களுக்கு செவிலியர்களுக்கு என்ன செய்வார்கள்? ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே போதிய மருத்துவர்கள் இல்லை, செவிலியர்கள் இல்லை, உரிய சிகிச்சை இல்லை, மருந்துப் பொருட்கள் இல்லை. உண்மையில் 20 ஆண்டுகளாக தோல்வி அரசை கொடுத்ததற்காக அவர்கள் பிஹாரின் 14 கோடி மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை முதல்வர் நிதிஷ் குமார் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் உடல்நிலை அப்படி. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மை முகத்தை பிஹார் மக்கள் அறிந்துவிட்டார்கள். இம்முறை அவர்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். மகா கூட்டணியின் ஆட்சியை அமைக்கும் மன நிலையில் மக்கள் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பின்மைக்கு முடிவு கட்ட அவர்கள் விரும்புகிறார்கள்" என தெரிவித்தார்.
243 தொகுதிகளைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவ.6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குகள் நவ.14-ம் தேதி எண்ணப்பட உள்ளன.