எதற்கும் அழாதவன்

எதற்கும் அழாதவன்


சுந்தரின் தாயைத் தனியே வந்து சந்தித்த அவன் நண்பன் ரகு, "லட்சுமியக்கா... ஒரு வருத்தமான செய்தி!... உங்க மகன் சுந்தரைக் கடந்த மூணு வருஷமா... உயிருக்குயிராய்க் காதலிச்ச அந்தக் கல்பனா... இன்னைக்கு அவனைத் தூக்கி வீசிட்டு வேறொருத்தனுக்குக் கழுத்தை நீட்ட தயாராயிட்டா!" என்றான் பதட்டமாய்.


  "அப்படியா?" என்று சாதாரணமாய்க் கேட்டாள் சுந்தரின் தாய் லட்சுமி.


  "என்னங்க அவனை மாதிரியே நீங்களும் அலட்சியமா ரீஆக்ட் பண்றீங்க?.. அவனும் இப்படித்தான்... மாபெரும் சோகத்தைச் சாதாரணமாக எடுத்துக்கிட்டான்"


  'வேற எப்படி எடுத்துக்கச் சொல்றே?"


  "அந்தக் கல்பனா நேருக்கு நேரா நின்னு " இனிமே என்னை மறந்திடு!"ன்னு சொல்லிட்டு போனப்ப... இவன் கத்திக் கதறி அழுவான்னு நான் எதிர்பார்த்தேன்" என்றான் ரகு.


  "அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லைப்பா... சின்ன வயசுல அவன் பெயரே "எதுக்கும் அழாதவன்"... ஸ்கூல்ல படிக்கும்போது பிரம்பால வாத்தியார் விளாசுவார்... வாங்கிட்டு அமைதியா நிற்பான்... மத்த பசங்கெல்லாம் "வீல்..வீல்"ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவானுங்க... இவன் எத்தனை அடி வாங்கினாலும் அப்படியே நிற்பான்"


  "அடப்பாவமே" என்றான் ரகு.


  "அதுமட்டுமில்லைப்பா... அவன் அப்பா செத்தப்போ உறவுக்காரங்க எல்லோரும் ஒப்பாரி வச்சாங்க!... இவன் ஒரு துளி கூட அழாம இறுக்கனமான முகத்தோட அப்படியே நின்றிருந்தான்... அப்போ ஒரு சிலர் வந்து அவனைப் பார்த்து "அடேய்... இப்படி அழுகையை அடக்கி வைக்காதடா... நெஞ்சு வெடிச்சிடும்டா!... கொஞ்சமாவது அழுது தீர்த்திடுடா"ன்னு சொன்னாங்க.... அப்பவும் இவன் அழவே இல்லை"


  "என்னது... இவ்வளவு கல் நெஞ்சக்காரனாய் இருக்கான் இந்த சுந்தர்"

-----

   அடுத்த மாதத்தில் சுந்தரின் காதலி கல்பனாவின் திருமணம் நடந்த அன்று நிச்சயம் சுந்தர் அதைத் தாங்க முடியாமல் அழுதே தீருவான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பன் ரகு ஏமாந்து போனான்.


    சுந்தராவது அழுபதாவது?


  "எப்படி?... எப்படி... இவனால் மட்டும் இப்படி இருக்க முடியுது?... நாமெல்லாம் சினிமாவுல சோகக் காட்சி வந்தாலே அழுது விடறோமே... இவன் ஏன் இப்படி கண்ணோட்டம் இருக்கான்?"


   ஒரு நாள் அவன் தாய் லட்சுமி வாய் விட்டே கேட்டாள். "ஏண்டா... அந்தக் கல்பனாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சாமே?"


  "ஆமாம்"


  "உனக்கு அது மனசுக்குக் கஷ்டமாவே இல்லையாடா?"


   தாயின் முகத்தை சில வினாடிகள் நேருக்கு நேர் பார்த்த சுந்தர் இதழோரம் ஒரு புன்னகையை வழிய விட்டுவிட்டு நகர்ந்தான்.


மறுநாள் காலை.


வீட்டின் பின்புறம், கொய்யா மரத்தடியில் நின்று பல் துலக்கிக் கொண்டிருந்த சுந்தர் திடீரென பெரிய குரலில் அழ,


   வீட்டுக்குள்ளிருந்து பதறியபடி ஓடி வந்தாள் லட்சுமி.


   கடந்த 25 வருடங்களாக காணாத மகனின் அழுகையைக் கண்டவள் துடித்துப் போனாள். "டேய்... டேய்... என்னடா ஆச்சு உனக்கு?"


   சுந்தர் ஆட்காட்டி விரலால் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினான்.


  அவன் காட்டிய இடத்தைக் கூர்ந்து பார்த்தாள் லட்சுமி.


  அங்கே ஒரு புறா இறந்து கிடந்தது.


  "அட... இந்தப் புறாவை பார்த்தா அழுதே?" கேட்ட லட்சுமியிடம் மேலே காட்டினான் சுந்தர்.


   அங்கே மரக்கிளையில் அமர்ந்திருந்த இன்னொரு புறா இறந்து கிடந்த புறாவையே சோகமாய்ப் பார்த்தபடி அமர்ந்திருக்க,


 நெற்றி சுருக்கினாள் லட்சுமி.


  "அம்மா அந்தப் புறாவோட ஜோடிதான் செத்துக் கிடக்கிற இந்தப் புறா!.. இதுக ரெண்டும் தினமும் ஜோடியா... கிளைக்குக் கிளை தாவி... விளையாடுவதையும், மூக்கோடு மூக்கு சேர்த்து கொஞ்சுவதையும், நான் பார்த்திருக்கிறேன்!.. இன்னைக்கு அந்தப் புறா தன் ஜோடியை இழந்துடுச்சு!... அதோட மனசு எத்தனை வேதனைப்படும்?... நெனச்சுப் பார்த்தால் என்னால தாங்கவே முடியலம்மா!" என்றவனை வினோதமாய்ப் பார்த்தபடி, அவன் தோளைத் தட்டி ஆறுதல் கூறினாள் தாய் லட்சுமி.


முற்றும்.


முகில் தினகரன்

கோயம்புத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%