எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு பாதிப்பில்லை ; ஆய்வில் நிரூபணம் என மத்திய அரசு திட்டவட்டம்
புதுடில்லி: 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் உபயோகப்படுத்துவதால் வாகனங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்பது ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார். ராஜ்யசபாவில் நடிகர் கமல் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
எத்தனால் என்பது புதுப்பித்தக்க உயிரி எரிபொருள்; இதை பெட்ரோலில் கலப்பதன் மூலம் காற்று மாசு குறைகிறது. இதனால் வாகனங்களுக்கு 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு தீவிரம் காட்டி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. இது தொடர்பாக ராஜ்யபாவில், எம்பி கமல்ஹாசன் கேள்வி எழுப்பி இருந்தார். அவர் எழுப்பிய கேள்வி விபரங்கள் பின்வருமாறு:
1. வாகனங்களுக்கு எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவது குறித்து முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதா? இல்லையெனில் அதற்கான காரணங்கள்?
2. நாடு முழுவதும் இ10 பெட்ரோல் (10 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல்) விற்பனையை நிறுத்தியதற்கான காரணங்கள்? மீண்டும் அதை விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்பு உள்ளதா?
3. 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான கூடுதல் செலவினம், காப்பீடு அல்லது நுகர்வோர் பாதுகாப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டதா?
* எத்தனால் விலையில் ஏற்ற இறக்கங்கள் குறித்து அரசு மதிப்பீடு செய்ததா?
இவ்வாறு கேள்விகளை கமல் எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதில்: வாகனங்களின் மைலேஜ், ஏற்புத்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து நிடி ஆயோக் தலைமையிலான வல்லுநர் குழு ஆய்வு செய்தது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் , ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா மற்றும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றாலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
விரிவான கள ஆய்வுகளின் மூலம், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தும்போது, வாகனங்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பழைய வாகனங்களிலும் கூட, செயல் திறனில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று கண்டறியப்பட்டது.
வாகனங்களை இயக்கும்போதும், ஸ்டார்ட் செய்யும்போதும் பாதிப்பு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. வாகனங்களின் மெட்டல் பாகங்கள், பிளாஸ்டிக் பாகங்களுக்கும் இந்த பாதிப்பும் என்பதும் நிரூபணம் செய்யப்பட்டது. இதனால் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களின் மைலேஜ்க்கு எந்த பாதிப்பும் இல்லை. பொதுவாக வாகன மைலேஜ் என்பது எரிபொருளை சார்ந்தது மட்டுமல்ல.
அவை வாகனங்களை இயக்கும் வழிமுறை, இன்ஜின் ஆயில், பராமரிப்பு முறைகள், டயர் அழுத்தம், ஏசி பயன்பாடு, அதிக சுமைகளை ஏற்றி செல்வது உள்ளிட்டவையும், மைலேஜ் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு நிதின் கட்கரி பதில் அளித்துள்ளார்.