என் குடும்பத்துக்கு எதுவும் செய்ததில்லை; மக்களுக்காக உழைத்தேன்: இன்னும் ஒரு வாய்ப்பு தாருங்கள்-வாக்காளர்களுக்கு வீடியோ வெளியிட்ட நிதிஷ்குமார்

என் குடும்பத்துக்கு எதுவும் செய்ததில்லை; மக்களுக்காக உழைத்தேன்: இன்னும் ஒரு வாய்ப்பு தாருங்கள்-வாக்காளர்களுக்கு வீடியோ வெளியிட்ட நிதிஷ்குமார்


பாட்னா, நவ.1–


என் குடும்பத்திற்காக அல்ல, மக்கள் அனைவருக்காகவும் உழைத்தேன். இன்னும் ஒரு வாய்ப்பை மக்கள் தர வேண்டும் என வாக்காளர்களுக்காக இன்று வெளியிட்ட வீடியோவில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.


பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகள் கொண்ட சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 6ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது. இந்நிலையில் முதல் கட்ட தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு இன்று நிதிஷ்குமார் வீடியோவில் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது:–


எனது அன்புக்குரிய பீகாரின் சகோதர சகோதரிகளே, என்னை 2005ம் ஆண்டு முதல் பீகார் மக்களுக்காக உழைக்க நீங்கள்தான் வாய்ப்புக் கொடுத்தீர்கள். எப்போது என்னிடம் பீகார் ஆட்சி கிடைத்ததோ அதுநாள் முதல் நான் இரவு பகலாக கடும் பணியாற்றி முழு நேர்மையுடன் இருந்து வந்துள்ளேன்.


ராஷ்ட்ரிய ஜனதா தளம் அதன் 15 ஆண்டுகால ஆட்சியில் காட்டாட்சி ராஜ்ஜியம் நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சட்டம் ஒழுங்கை மேம்படுத்தவும், பெண்கள் இரவில் தனியாகப் பாதுகாப்பாகப் பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்யவும் பாடுபட்டது. முதலில், அவர்கள் பாழ்படுத்திச் சென்றதை மீட்கவே பணியாற்ற வேண்டியதாக இருந்தது. அதனுடன் சேர்த்து பிற துறைகளின் முன்னேற்றங்களில் கவனம் செலுத்தினோம். இன்று பல துறைகளில் நாம் முன்னேறியிருக்கிறோம்.கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றின் நிலைமை கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.


பீகாரின் முதல்வராக இருந்த லாலு, மாநிலத்துக்காக எதுவுமே செய்யவில்லை. வெறும் குடும்ப அரசியல் மட்டும்தான் செய்துகொண்டிருந்தார். முந்தைய அரசு பெண்களுக்காக எதையும் செய்யவில்லை. தற்போது நாங்கள் பெண்களுக்காக பாடுபட்டு வருகிறோம். அவர்கள் யாரையும் சாராமல் வாழ வழிவகை ஏற்படுத்தி வருகிறோம். இந்துவாக இருந்தாலும் சரி முஸ்லிமாக இருந்தாலும் சரி, அனைவருக்காகவும் பாடுபட்டு வருகிறோம். நான் என் குடும்பத்துக்காக எதையும் செய்ததில்லை. தற்போது, பீகாரியாக இருப்பது அவமரியாதைக்குரியது அல்ல, மரியாதைக்குரியது என்ற அளவில் மாற்றியிருக்கிறோம்.


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பீகாரின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஆதரவையும் அளித்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே பீகாரை மேம்படுத்த முடியும்.


மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள். இருவருமே ஆட்சி செய்வதால் வளர்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளது. மாநிலம் வளர்ச்சியடைய பிரதமர் மோடிக்கு ஆதரவு அளியுங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். மீண்டும் ஒரு வாய்ப்புக் கொடுங்கள். மேலும் உங்களுக்காகப் பணியாற்றுவோம். முன்னணி மாநிலமாக வளர்ச்சியடைவதைப் பார்க்கலாம். நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்து தவறாமல் வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%