பழநி அருகே கணக்கன்பட்டியில் மக்காச்சோள பயிர்களில் ‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளிக்கும் பணி.
பழநி: பழநி பகுதியில் ஆளில்லா விமானம் எனப்படும் ‘ட்ரோன்’களை பயன்படுத்தி வயல்களில் பூச்சி மருந்து தெளிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் ட்ரோன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளதால், பழநியில் மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் தற்போது ஆர்வத்துடன் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட விதைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. வெளிநாடுகளில் ஆளில்லா விமானம் எனப்படும் ‘ட்ரோன்’ மூலம் உரம் மற்றும் பூச்சி மருந்துகளை வயல்வெளியில் தெளிக்கின்றனர்.
இதேபோல், தற்போது பழநி விவ சாயிகளும் ட்ரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களுக்காக, பழநியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ட்ரோன்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. இரண்டு, மூன்று ஆட்கள் சேர்ந்து பல மணி நேரம் செய்யக்கூடிய வேலையை 15 நிமிடங்களில் செய்து முடிப்பதால் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், தற்போது ட்ரோன்களுக்கு கடும் கிராக்கி எற்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘ட்ரோன்’ ஆபரேட்டர் அருண் கூறியதாவது: ட்ரோனை பயன்படுத்தி தினமும் 4 முதல் 5 விவசாயிகளின் தோட்டங்களில் மருந்து தெளித்து வருகிறேன். ஒரு கேன் (10 லிட்டர்) மருந்து தெளிக்க வாடகை ரூ.500 . ஒரு ஏக்கரில் 10 முதல் 15 நிமிடங்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கலாம். அதனால் ட்ரோன்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது, என்றார்.
இதுகுறித்து கணக்கன்பட்டி விவசாயி அப்பாசாமி துரை கூறியதாவது: விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் குறித்த நேரத்தில் உரம் மற்றும் மருந்து தெளிக்க முடியாத நிலை உள்ளது. அதனை, ட்ரோன் மூலம் பூர்த்தி செய்ய முடிகிறது. ட்ரோன் மூலம் பயிர்களின் மேல் சரியான அளவு சீராக மருந்து தெளிக்கப்படுவதால் பயிர்களின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது.
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் நாள் முழுவதும் செய்ய வேண்டிய வேலை, ஒரு மணி நேரத்துக்குள் முடிந்து விடுகிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தால் நேரமும், பணமும் மிச்சமாகிறது. விவசாயிகள் பலரும் ட்ரோனை பயன்படுத்தி மருந்து தெளிக்க தொடங்கி உள்ளனர். அதனால், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு, முன்பதிவு செய்தால் மட்டுமே ட்ரோன் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது, என்றார்.