எர்ணாகுளம் டூ பெங்களூரு: 3 மாநிலங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில்.. கோவையில் பயணிகள் உற்சாக வரவேற்பு!
கோயம்புத்தூர்: கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களையும் இணைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள புதிய வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
காசி - கஜுராஹோ, லக்னோ - சஹரன்பூர், ஃபிரோஸ்பூர் - டெல்லி, எர்ணாகுளம் - பெங்களூரு ஆகிய 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். குறிப்பாக, கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூரு வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெங்களூருவில் இருந்து காலை 5.10 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் வழியாக மதியம் 1.50 மணிக்கும் எர்ணாகுளம் சென்றடையும். மறுமார்க்கமாக, எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் ரயில் மேற்கண்ட வழித்தடம் வழியாக இரவு 11 மணிக்கு பெங்களூரு சென்றடையும். கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களையும் இணைக்கும் இந்த ரயில் சேவைக்கு கோவையில் பயணிகள் மற்றும் தொழில்துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இன்று காலையில் எர்ணாகுளத்தில் இருந்து கிளம்பி கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்த வந்தே பாரத் ரயிலை மாணவர்கள், தொழில்துறையினர், பாஜகவினர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் கூறுகையில், “இந்த ரயில் சேவை பல தரப்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சாதாரண ரயில் சேவைகள் குறித்து மக்களிடம் உள்ள கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து வந்தே பாரத் ரயில் சேவையால் குறைந்த நேரத்தில் பயணிக்க முடியும் எனக் கூறிய ரயில்வே கூடுதல் மேலாளர் சரவணன், “ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை முடிந்ததும் மக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். போத்தனூர் ரயில் நிலையம் ரூ.98 கோடி செலவில் டெண்டரில் உள்ளது. அது இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் செயல்படுத்தப்படும். மேலும், கோவையிலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் தற்போது எட்டு பெட்டிகள் உள்ள நிலையில், அதனை 16 பெட்டிகளாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது” எனவும் தெரிவித்தார்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த வந்தே பாரத் ரயில் கேரளா-தமிழ்நாடு-கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களையும் இணைக்கும் ரயிலாகவும், குறைந்த நேரத்தில் செல்லக் கூடியதாகவும் இருப்பதால், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, கோவையில் உள்ள தங்க நகை வியாபாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். முன்பாக, பெங்களூருக்கு தங்க நகைகளைக் கொண்டு செல்வது சிரமாக இருந்த நிலையில், தற்போது வேகமாகவும், பாதுகாப்பாகவும் எடுத்துச் செல்லலாம் என்றனர்.