ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்: இந்திய வீரர்கள் முதலிடத்தில் நீடிப்பு
Sep 27 2025
33

துபாய்:
சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது. இதில், பேட்டிங்கில் இந்தியாவின் அபிஷேக் சர்மாவும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தியும், ஆல்ரவுண்டரில் ஹர்திக் பாண்டியாவும் முதலிடத்தில் தொடர்கின்றனர்.
கடந்த வாரம் வெளியிடப்பட்டியலில் முதன்முறையாக முதலிடத்துக்கு முன்னேறியிருந்த வருண் சக்ரவர்த்தி கூடுதலாக 14 புள்ளிகளை பெற்று 747 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அப்ரார் அகமது 12 இடங்கள் முன்னேறி 703 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
இலங்கையின் வனிந்து ஹசரங்கா ஓர் இடம் முன்னேறி 7-வது இடத்தையும், வங்கதேசத்தின் முஸ்டாபிஸூர் ரஹ்மான் 6 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும் பிடித்து உள்ளனர். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஓர் இடம் முன்னேறி 10-வது இடத்தில் உள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 74 ரன்கள் விளாசிய இந்தியாவின் அபிஷேக் சர்மா 907 புள்ளிகளுடன் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் தொடர்கிறார். திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா ஓர் இடம் முன்னேறி முறையே 3 மற்றும் 6-வது இடத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் 31 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர், 58 ரன்கள் அடித்திருந்தார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா 238 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். அதேவேளையில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் அவர், 6 இடங்கள் முன்னேறி 60-வது இடத்தை பிடித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?