
ஒடுகத்தூர், அக்.10 ஒடுகத்தூர் அருகே குடிகம் மலை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பிரேம்குமாரின் (34) மனைவி ரோஜாவுக்கு (30) புதனன்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ரோஜாவை ஏற்றிக்கொண்டு 14 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிப்பட்டு கிராமம் வழியாக சென்றது. ஆனால் சிறிது தூரம் சென்றதும் சேறும் சகதியுமான மண்சாலையில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது. ஊர் மக்கள் உதவியுடன் டிராக்டர் மூலம் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஆம்புலன்ஸை மீட்டனர். மேலும் செல்ல முடியாத நிலையில், 70 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு ஜமுனாமரத்தூர், போளூர் வழியாக அழைத்துச் சென்றனர். வழியில் பிரசவ வலி அதிகரித்து ஆம்புலன்ஸிலேயே ரோஜாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாய்க்கும் சேய்க்கும் சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விரைவாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது இருவரும் நலமாக உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஒடுகத்தூர் அருகே குடிகம் கிராமத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை மற்றும் அவசரத் தேவைகளுக்குக் கூட கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், மலைவாழ் மக்களின் நலன் கருதி சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?