ஒரே வீட்டை 2-வது முறையாக குத்தகைக்கு கொடுப்பதாக கூறி ரூ.10.50 லட்சம் மோசடி: வீட்டு உரிமையாளர் கைது
Jul 19 2025
10

சென்னை:
ஒரே வீட்டை இரண்டாவது முறையாக குத்தகைக்கு தருவதாகக் கூறி ரூ.10.50 லட்சம் மோசடி செய்த வீட்டு உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் மணிகண்டன் (25). இவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் அயனாவரம் பகுதியில் குத்தகைக்கு வீடு பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அயனாவரம், பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர் சிவகுமார் (56) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர், மணிகண்டனிடம் தனக்குச் சொந்தமான வீடு இதே பகுதியில் உள்ளது. அந்த வீட்டை ரூ.15 லட்சத்துக்கு குத்தகைக்கு கொடுப்பதாகவும், தற்போது வசித்து வருபவர்கள் இன்னும் 2 மாதங்களில் வீட்டை காலி செய்ததும் குடிபெயரலாம் எனவும் கூறியுள்ளார். இதை நம்பிய மணிகண்டன் ரூ.15 லட்சத்தை சிவகுமாரிடம் கொடுத்து, குத்தகை ஒப்பந்த பத்திரம் போட்டுள்ளார்.
ஆனால் சிவகுமார் சொன்னபடி வீட்டை காலி செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் சிறிது சிறிதாக ரூ.4.5 லட்சம் திருப்பிக் கொடுத்துள்ளார். மீதி பணம் ரூ.10.5 லட்சத்தை கேட்டபோது, பணத்தைத் தர முடியாது என மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் கடந்த 14-ம் தேதி இது தொடர்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதையடுத்து, வீட்டை குத்தகைக்கு தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக சிவகுமாரை கைது செய்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?