ஓடமும் ஒரு நாள்

ஓடமும் ஒரு நாள்


"டேய் பாலு... இந்த சைக்கிள்... வாங்கினதா... இல்லை... பூமிக்கு அடில இருந்து தோண்டி எடுத்ததா?" பணக்கார வீட்டுப் பையனான குண்டு வினோத், ஏழைப் பையன் குமாரைப் பார்த்து நக்கலடிக்க,


"ஹோ..." வென்று சிரித்தனர் அவன் நண்பர்கள்.


இன்னொருவன், "டேய் இது ஹைதர் அலி காலத்து சைக்கிள்டா" என்றான்.


மீண்டும் சிரிப்பொலி.


செயின் கழன்று போன காரணத்தால் தன் பழைய சைக்கிளைத் தள்ளியபடி நடந்து கொண்டிருந்த குமாருக்கு கண்களில் நீர் முட்டியது.


வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நடந்ததைச் சொல்லி அழ, அவனைச் சமாதானப்படுத்திய தந்தை உடனே சைக்கிளை ரிப்பேருக்குக் கொண்டு சென்றார்.


மறுநாள் சரி செய்யப்பட்ட சைக்கிளை ஓட்டி வந்த குமாரை, குண்டு வினோத்தின் பணக்காரக் கும்பல் மறுபடியும் கிண்டல் செய்து தீர்த்தது.


ஒரு மாதத்திற்குப் பிறகு, பள்ளி இறுதியாண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் கடைசிப் பரிட்சையன்று வேகவேகமாக தன் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குமார், சாலையோரம் நின்று அழுது கொண்டிருந்த வினோத்தையும், அவனருகில் முன் சக்கரம் வளைந்த நிலையில் கிடந்த அவனது காஸ்ட்லி சைக்கிளையும் பார்த்து நின்றான்.


"டேய் குமார் ஹெல்ப் பண்ணுடா என்னோட சைக்கிளை ஒரு திமிர் பிடிச்ச பணக்காரன் கார்ல இடிச்சுத் தள்ளிட்டுப் போயிட்டான்" வினோத் கெஞ்ச,


"ஏன் உன்னோட பணக்கார தோஸ்துக எவனாச்சு கூட டபிள்ஸ் ஏறி போக வேண்டியதுதானே?" 


"அவனுக தங்களோட காஸ்ட்லி சைக்கிள்ல என்னை மாதிரி குண்டனை ஏத்தினா டயர் வெடிச்சிடும்னு சொல்லிட்டுப் போயிட்டானுக.."


"சரி... இப்ப வேணும்கறே!" குமார் கேட்டான்.


"உன் சைக்கிள்ல... என்னை?"


"அய்யய்ய... இது ஹைதர் காலத்து..."


குமார் சொல்லி முடிக்கும் முன், "ஸாரி... அன்னிக்குத் தெரியாம.. "


"சரி.. சரி... வந்து ஏறு... இன்னிக்கு எக்ஸாம்... நான் மறுத்தா நீ ஃபெயிலாயிடுவே... அப்படி ஆகக் கூடாதுன்னு கூட்டிட்டிப் போறேன்"


அடுத்த நாளிலிருந்து அந்தப் பணக்கார கும்பல் குமாரின் சைக்கிளை கிண்டல் செய்வதில்லை.


(முற்றும்)



முகில் தினகரன்,

கோயமுத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%