போலி ஆவணம் மூலம் ரூ.3 கோடி நிலம் அபகரிப்பு: சென்னையில் சகோதரிகள் இருவர் கைது
Nov 21 2025
42
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில், சென்னையில் சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லியில் வசித்து வருபவர் விஸ்வநாதன் மகாதேவன் (58). இவரது தாய்மாமா கணபதி என்பவருக்கு சொந்தமாக சென்னை கொளத்தூரில் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலம் இருந்தது. கணபதிக்கு வாரிசு கிடையாது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்துவிட்டார். இதை தெரிந்து கொண்ட மோசடி நபர்கள் சிலர் போலி ஆவணம் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் அபகரித்தனர்.
இதையறிந்த மகாதேவன் இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில் நில மோசடியில் ஈடுபட்டது, சென்னை சீனிவாசபுரம் தியாகராய நகரைச் சேர்ந்த குமாரி (42), அவரது சகோதரியான மேற்கு சைதாப்பேட்டை ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்த மேரி (33) என்பது தெரிந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் மருத்துவ விஞ்ஞானி கணவர் கைது
ஆவடி: அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள முகப்பேர் மேற்கு, ரெட்டிப்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சேர்ந்த மருத்துவர் அசாருதீன் (31). இவர் சென்னை, சேத்து பட்டில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ஐசிஎம்ஆர்) மருத்துவ விஞ்ஞானியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி ஹுருல் சமீரா (29). இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இருவரும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஆக. 25-ம் தேதி, ஹுருல் சமீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
மேலும் அம்பத்தூர் கோட்டாட்சியர் சதீஷ்குமார், அசாருதீன் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில், அசாருதீன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், ஹுருல் சமீரா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அசாருதீனை நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?