கரூர் அசம்பாவிதம்: விஜய் மீது செந்தில் பாலாஜி சரமாரி குற்றச்சாட்டு

கரூர் அசம்பாவிதம்: விஜய் மீது செந்தில் பாலாஜி சரமாரி குற்றச்சாட்டு


விஜய் பேசிய 6-வது நிமிடத்தில் தான் செருப்பு வீசப்பட்டது; என்னைப் பற்றி விஜய் 16-வது நிமிடத்தில் தான் பேசினார்


கரூர், அக். 1–


கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விஜய் மீது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சரமாரியாக குற்றஞ்சாட்டினார்.


விஜய் அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இது போன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


கரூரில் இன்று நிருபர்கள் சந்திப்பில் செந்தில் பாலாஜி கூறியதாவது:–


கடந்த 27ம் தேதி கரூரில் நடந்த துயர சம்பவம் மிகவும் துயரமானது. யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாதது. அந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.


மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு கரூர் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நன்றி. 29 ஆண்டுகளாக பொது வாழ்வில் இருக்கிறேன். 1996ம் ஆண்டு பொது வாழ்வு தொடங்கியது.


கரூர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் இதுவரை நடக்காத ஒன்று. வரும் காலத்தில் இதுபோன்ற துயர சம்பவம் கரூரில் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கேயும் நடக்காத அளவிற்கு, அனைவரும் சேர்ந்து இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.


செருப்பு வீசியது யார்?


கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. யார் மீது தவறு என பேசாமல் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் விஜய் வாகனத்தை போலீசார் முன்னதாக நிறுத்த கூறினர். அவரைக் காண வேண்டும் என்பதற்காகவேகூட்டம் அவரை பின் தொடர்ந்தது. விஜய் பேசத் தொடங்குவதற்கு முன்பே அங்கு நிலைமை மோசமடைந்துவிட்டது. இதனால் விஜய்யின் கவனத்தை ஈர்க்க யாராவது செருப்பை வீசியிருக்கக்கூடும். விஜய் பேசிய 6-வது நிமிடத்தில் தான் செருப்பு வீசப்பட்டது. என்னைப் பற்றி விஜய் 16-வது நிமிடத்தில் தான் பேசினார். என் பெயரை விஜய் சொன்ன பிறகுதான் செருப்பு வீசப்பட்டதாக தவறான தகவலை பரப்புகின்றனர். கட்சி அலுவலகத்தில் நிர்வாகி களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது தான் எனக்கு தகவல் வந்தது.


அந்த தகவலின்பேரில் தான் கட்சி அலுவலகத்தில் இருந்து 7.47 மணிக்கு அமராவதி மருத்துவமனைக்கு சென்றேன். அதிமுக மாவட்ட செயலாளர் 8 மணிக்கு மருத்துவமனைக்கு வந்தார்.


போலீஸ் சொல்லியதை


கேட்கவில்லை


போலீஸ் எவ்வளவு சொல்லியும் விஜய் கேட்காததால் தான் இவ்வளவு பிரச்சினை. கூட்டநெரிசல் அதிகமாகும்போது, ஜெனரேட்டர் அறை தடுப்புகளை உடைத்து உள்ளே விழத்தொடங்கினர், அப்போதுதான் ஜெனரேட்டர்கள் ஆப் செய்யப்பட்டது. அப்போது கூட சாலை விளக்குகள் ஆப் செய்யப்படவில்லை. அவர்கள் கூடுதலாக அமைத்த விளக்குகள் மட்டும் ஆப் செய்யப்பட்டது. வீடியோவில் எல்லாம் தெளிவாக உள்ளது, எங்கும் மின் விநியோகம் தடைபடவில்லை கரூர் துயர சம்பவத்தை மடைமாற்றம் செய்ய முயற்சிக்கும் வகையில் விஜய் பேசுகிறார்.


விஜய்யின் விக்கிரவாண்டி, மதுரை என அனைத்து கூட்டங்களிலும் தொண்டர்கள் பாதிக்கப்பட்டனர். விஜய்க்கு வருவது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்.


குறிப்பிட்ட நேரத்தில்


வந்திருந்தால்...


விஜய், அன்று மாலை 4 மணிக்கு வந்திருந்தால் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது. குறித்த நேரத்தில் வந்திருந்தால் பிரச்சினையே நடந்திருக்காது.


கூட்டம் நடத்தும்போது, எவ்வளவு மக்கள் கூடுவார்கள் என கணித்து அதற்கேற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டியது ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பு. கரூர் லைட் அவுஸ் கார்னரில் அதிகபட்சம் 7000 பேர் நிற்கலாம், உழவர் சந்தை அருகே அதிகபட்சம் 5000 பேர் கூடலாம். கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 108 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அரசு தன் கடமையை சரியாக செய்தது, ஆனால் அந்த அரசியல் கட்சி தனது கடமையை சரிவர செய்ய வில்லை. யார் பாதிக்கப்பட்டாலும் அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%