கரூர் கூட்ட நெரிசல் பலி 40 ஆக அதிகரிப்பு: நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?

கரூர் கூட்ட நெரிசல் பலி 40 ஆக அதிகரிப்பு: நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியது என்ன?



சென்னை: கரூர் துயரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அறிக்கை அளித்த பிறகு, அதன் அடிப்படையில் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கரூரில் தவெக தலைவர் விஜய் பேசிய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்தும், இந்தச் சம்பவத்தை அடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த கருத்துகள் குறித்தும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:


நேற்று 27.9.2025 கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுவந்த செய்தியை அறிந்த முதல்வர், உடனடியாக இரவே சென்னை, தலைமைச் செயலகத்திற்குச் சென்று, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திருச்சி, சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மருத்துவக் குழுக்களுடனும், காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோரை அனுப்பிவைத்து போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, முதல்வர், நேற்று நள்ளிரவே கரூர் மாவட்டத்துக்கு நேரில் சென்றார்.


இன்று (28.9.2025) அதிகாலையில், முதல்வர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது, சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்களையும், தேவைப்படும் உதவிகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.


மேலும், பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரின் நிலை குறித்தும் கேட்டறிந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருபவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், உயிரிழப்புகள் ஏற்படாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் வரவழைத்துப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுடன் ஒருங்கிணைந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.


பின்னர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். கூட்ட நெரிசலில், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அமராவதி மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர், அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.


அதன்பிறகு, அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியின் விவரம்: மிகுந்த துயரத்தோடு, மிகவும் கனத்த இதயத்தோடு உங்கள் முன் நான் நின்றுக் கொண்டிருக்கிறேன். கரூரில் நடந்த கொடூரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாத அளவுக்கு ஒரு சோக சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதைப்பற்றி விவரிக்க கூட எனது மனம் இடம் கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு நான் வேதனையில் இருக்கிறேன்.


நேற்று இரவு, சென்னையில் அதிகாரிகளிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. உடனே, முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜியை தொடர்பு கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் என்று கூறினேன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%