கல்லறை, பட்டா சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு: மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் தகவல்
சென்னை: ‘கல்லறை, பட்டா சிக்கல்களுக்கு டிசம்பர் மாதத்துக்குள் தீர்வு காணப்படும்’ என மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் ஆணையக் குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வருகிறது.
அதன் நிறைவாக சென்னை மாநகருக்கான கலந்தாய்வுக் கூட்டம், மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ.ஜோ.அருண் சே.ச தலைமையில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் சமூகங்களின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, அவர்களது கருத்துகளை ஆணையத் தலைவர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து, 1,477-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களைப் பெற்றுள்ளோம். இவற்றுள் 1,156 கோரிக்கைகளுக்கு கூட்ட அரங்கிலேயே தீர்வு கண்டிருக்கிறோம். சிலவற்றுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
சிறுபான்மையினருக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது கல்லறை மற்றும் கபர்ஸ்தான் வசதி இல்லாமைதான். அந்தவகையில் கல்லறை அமைக்க இடங்கள் வேண்டும், இடமிருக்கும் இடத்தில் அதற்குப் பட்டா வேண்டும், பட்டா வழங்கப்பட்ட இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்தல், பாதுகாப்பு மற்றும் கட்டுமானத்துக்கான உதவித்தொகை வேண்டும் என்ற கோரிக்கைகளே அதிகமாக வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் ஆலயங்கள், மசூதிகள், சமண விகார்கள், பவுத்த விகார்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு தடையில்லாச் சான்றிதழ் வேண்டும் என்றும், 10 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இடங்களுக்கு பட்டா வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பட்டா இல்லாததால், புனரமைப்பு மற்றும் பழுதுபார்க்கும் நிதியைப் பயன்படுத்த முடியாமல் போகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள கல்லறை மற்றும் பட்டா பிரச்சினைக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் தீர்வுகாண்பதை விட, மாநில அளவில் ஓர் அரசாணையாக வெளியிட்டுத் தீர்வுகாண வேண்டும் என முதல்வரிடம் பரிந்துரை வைத்துள்ளோம்.
டிசம்பர் மாதத்துக்குள் இதற்குத் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். சிறுபான்மையினர் ஆணையத் துணை தலைவர் எம்.எம். அப்துல் குத்தூஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.