இந்தியாவை வளர்ந்த நாடாக்க கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் வலியுறுத்தல்
Nov 29 2025
21
சென்னை: இந்தியாவை வளர்ந்த நாடாக்க நமது கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்று அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி தெரிவித்தார்.
சென்னை சகோதயா பள்ளி கூட்டமைப்பின் சார்பில் சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர்களுக்கான ‘தேசிய அளவில் கற்றல், கற்பித்தலில் உள்ள சவால்கள்’ குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி பேசியதாவது: சுதந்திரம் பெற்று நீண்ட காலமாகியும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளைப் போல் நாம் முன்னேற முடியவில்லை. நாம் முன்னேற சிறந்த கல்வி, தனிநபர் வருமானம், ஆரோக்கியம் ஆகியவை முக்கியமாகும். அதிலும் முக்கியமானது கல்வி.
நாட்டில் 78 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர்களாக மாறிவிட்டோம். பொறியியல், வானியல் துறைகளில் நாம் முன்னேறியுள்ளதாக கூறிக் கொள்கிறோம். ஆனால், அதனால் நமக்கு பெரிய அளவில் பயனில்லை.
நிலவில் தண்ணீர் உள்ளதை கண்டறிந்தோம். அதனால் நம் குக்கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கப்போகிறதா? திறமையை வளர்க்கும் கற்றல்தான் முக்கியம். நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் தனிநபர் வருமானத்தில் மோசமாக உள்ளோம். தற்போது நீதி, நேர்மை, உண்மை, தைரியத்தை வளர்க்கும் ஆசிரியர்கள்தான் தேவை. ஏனெனில் நாட்டில் உள்ள ஐஏஎஸ் உள்ளிட்ட உயரிய பதவிகளில் உள்ளவர்களில் 50 சதவீதம் பேரும், பல்கலைக்கழக துணைவேந்தர்களில் 70 சதவீதம் பேரும் ஊழல்வாதிகளாகவே உள்ளனர்.
2020-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுமென்ற கனவுடன் அப்துல்கலாம் செயல்பட்டார். அவர் கனவு கடந்து ஐந்தாண்டுகளாகிவிட்டன.
தற்போது பிரதமர் மோடி 2047-ல் வளர்ந்த நாடாக்குவேன் எனக் கூறுகிறார். நம்நாட்டின் அடிப்படை கல்வியின் கட்டமைப்பை மாற்றாதவரை நாடு முன்னேறுவது கனவுதான். இந்தியாவை வளர்ந்த நாடாக்க, நம் கல்வி, ஆசிரியர், மாணவர்கள் தரத்தில் உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?