காசா: நிவாரண பொருள் விநியோகத்தின்போது சோகம்; கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி

காசாவில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மிக நெருக்கடியான சூழலில் வசித்து வருகின்றனர்.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் வழியாக சிலரை மீட்டது. இன்னும் 50 பேர் வரை விடுவிக்கப்படாமல் உள்ளனர்.
ஆனால் அவர்களில் பாதிபேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சூழலில், காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது. ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், காசா பகுதியில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், காசா முனை பகுதியில் இஸ்ரேல் ஆதரவு பெற்ற அமெரிக்க தொண்டு நிறுவனம் ஒன்று மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதில், 19 பேர் அதில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நெரிசலின்போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதில், கத்தியால் குத்தப்பட்டதில் ஒருவர் பலியானார். இதனால், மொத்தம் 20 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றி அந்த அமெரிக்க தொண்டு நிறுவனம் கூறும்போது, ஹமாஸ் அமைப்பு தவறான தகவல்களை பரப்பி, மக்களிடையே அச்சமூட்டி வருகிறது. இதில் வன்முறை ஏற்பட்டு உள்ளது என அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.
எனினும், இதற்கான சான்றுகள் எதனையும் அந்த அமைப்பு வெளியிடவில்லை. காசாவில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மிக நெருக்கடியான சூழலில் வசித்து வருகின்றனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில், நிவாரண பொருட்களை வாங்க செல்லும்போது கூட, தாக்குதலுக்கு இலக்காகும் சோக நிலை காணப்படுகிறது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?