திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா மகத்தான உற்சவமாக நடைபெறவிருக்கிறது. 1,060 சிசிடிவி கேமிராக்கள், 24 மணி நேர மருத்துவ முகாம்கள் நகரின் அமைக்கப்பட்டு உள்ளன. அன்னதானத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கக் கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மகா தீபம்
நாளை மறுதினம் (டிசம்பர் 3 ஆம் தேதி) அதிகாலை திருக்கோவில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
15,000 போலீசார்
இதற்காக கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் சார்பில், மும்மரமாக ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், 5 டிஐஜி, 43 எஸ்பி உள்ளிட்ட 15 ஆயிரம் போலீசார் திருக்கோவில், மாடவீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
24 மணி நேரமும் குடிநீர்
நெடுஞ்சாலைத்துறை சார்பில், கிரிவலப் பாதை முழுக்க சுமார் 2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில், 15 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 24 மணி நேரமும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் பக்தர்களுக்கு தங்கு தடை இன்றி குடிநீர் கிடைப்பதற்காக சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
1,060 சிசிடிவி கேமிராக்கள்
அருணாசலேஸ்வரர் திருக்கோவிலுக்குள் இலவச தரிசன க்யூ லைன், சிறப்பு தரிசன க்யூ லைன் உள்ளிட்ட 114 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருவண்ணாமலை மாநகரம் கிரிவலப் பாதை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 1,060 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
24 தற்காலிக பேருந்து நிலையங்கள்
ஆன்மீக பக்தர்களின் வசதிக்காக நகரங்களை இணைக்கக்கூடிய 9 சாலைகளிலும், 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதோடு, அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செய்து வருகின்றது. சுமார் 130 இடங்களில் கார் பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அருணாசலேஸ்வரர் திருக்கோவில் சுற்றி, மாட வீதி கிரிவலப்பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 26 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கிரிவல பாதை, அருணாசலேஸ்வரர் கோவில் வளாகம், மாட வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் மக்களுக்காக 24 மணி நேரமும் பயன்படும் வகையில் அவசர சிகிச்சை முகாம்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
61 உதவி முகாம்கள்
அதுமட்டுமின்றி, காவல்துறையின் சார்பில் சுமார் 61 இடங்களில் 'May I Help you' முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன. உணவு பாதுகாப்பு துறை சார்பில் 252 இடங்களில் அன்னதானம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாக்கு மட்டைகளை பயன்படுத்தி, சுத்தமான முறையிலும், சுகாதாரமான முறையிலும் உணவு தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
129 இடங்களில் கழிப்பிட வசதி
24 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு, பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளனர். 129 இடங்களில் தேவையான கழிப்பிட வசதிகளும் முழுமையாக செய்து தரப்பட்டுள்ளன. நாளை மறுதினம் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கும் நிலையில் திருவண்ணாமலை தற்போது காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.