கார்த்திகை மாதச் சிறப்புகள்

கார்த்திகை மாதச் சிறப்புகள்


சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் மாதமே கார்த்திகை மாதம். காந்தள் மலர்கள் அதிகம் பூக்கும் மாதம் மற்றும் இது அதிக அளவு மழை பெய்யும் கார்காலம். அதனாலும் கார்த்திகை மாதம் என்ற பெயர் ஏற்பட்டது.


கார்த்திகை முதல் தேதி முடவன் முழுக்கு என்ற சிறப்பைப் பெறுகிறது. ஒரு முடவன் காவிரியில் துலாஸ்நானம் செய்ய வேண்டும் என்று மிக மிகவும் ஆசைப்பட்டு வந்தான். அவனால் நடக்க இயலாததால்ஸ அவன் வந்து சேரும்போது கார்த்திகை முதல் தேதி ஆகிவிட்டது. அவனது பக்தியை மெச்சிய பெருமாள், நீ கார்த்திகை முதல் தேதி காவிரியில் ஸ்நானம் செய்தாலும், உனக்கு துலாஸ்நானம் செய்த பலன் உண்டு என்று அருளினார். இதுவே முடவன் முழுக்கு.

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள் நரசிம்மருக்கு உகந்தவை அன்று விரதம் இருந்து நரசிம்மரை தரிசிப்பது மிகுந்த நன்மை பயக்கும். நாளை என்பதே இல்லாத நரசிம்மர் நமக்கு எல்லா நலன்களையும் அருளுவார்.

    

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் உமா மகேஸ்வர விரதம் இருந்தால் தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும் இந்த மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் சகல தோஷங்களில் இருந்தும் விடுபடுவர். கார்த்திகைப் பஞ்சமி, நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.

   

கார்த்திகை மாத சோமவாரங்கள் மிகுந்த விசேஷம் உடையவை. கார்த்திகை சோமவாரத்தில் சிவன் கோவில்களில் 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

 இம்மாதத்தில் எல்லா நாட்களிலும் மாலையில் அனைத்து இல்லங்களிலும் தீபம் ஏற்றுவர். கார்த்திகை மாதத் தேய்பிறை ஏகாதசி, ரமா ஏகாதசி எனவும், வளர்பிறை ஏகாதசி, பிரமோதினி ஏகாதசி எனவும் பெயர். 

   

பிரமோதினி ஏகாதசி "கைசிக ஏகாதசி" என்றும் அழைக்கப்படுகிறது. கைசிக ஏகாதசி திருக்குறுங்குடி கோயிலில் குடிகொண்டுள்ள நம்பி மீது பக்தி உள்ள, பாணர் குலத்தைச் சேர்ந்த நம் பாடுவார் என்ற பக்தரின் இறைபற்றைக் கூறுகிறது. கைசிக ஏகாதசி வரலாற்றை நினைவு கூறுவதே இதன் சிறப்பு திருக்குறுங்குடி கோயிலில் இன்றும் கைசிக ஏகாதசி அன்று நம்பாடுவான் கதை நாடகமாக நடித்துக் காண்பிக்கப்படுகிறது. இந்த ஏகாதசி அன்று விரதம் இருந்தால் ஆண்டில் அனைத்து ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் உண்டு. அன்று ஒரு துளசி இலை கொண்டு விஷ்ணுவை வணங்குவது நவரத்தினங்களை பகவானுக்கு சமர்ப்பிப்பதைக் காட்டிலும் உத்தமமானது. கைசிகம் என்பது ஒரு வகைப் பண். இதை வராக அவதாரத்தின் போது பூமாதேவிக்கு வராகப் பெருமாள் அருளியதாக வராக புராணம் கூறுகிறது. 

  

கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவர் அஷ்டமியாக கொண்டாடப்படுகிறது அன்று வைக்கத்து அஷ்டமியும் கூட.

வைக்கத்து அஷ்டமி, கேரளாவில் உள்ள வைக்கம் மகாதேவர் கோவிலில் மிகச் சிறப்பாக் கொண்டாடப்படுகிறது. முன்பு ஒரு காலத்தில் வியாக்கிரபாதர் என்ற முனிவர், கரன் என்ற அசுரனிடமிருந்து கிடைத்த சிவலிங்கத்தை நீண்ட காலம் பூஜை செய்து வந்தார். சிவபெருமான் அவருக்கு, ஒரு நாள் இந்த இடத்தில் காட்சி அளித்தார். முனிவர் இறைவனிடம் தனக்கு காட்சி அளித்த நாளில் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு அவர்கள் வேண்டியதை வழங்கி விட வேண்டும், என்று வேண்டிக் கொண்டதாகத் தல புராணம் தெரிவிக்கிறது. இதுவே வைக்கத்து அஷ்டமி என்று கொண்டாடப்படுகிறது. அன்று கேரள பாரம்பரிய நிகழ்ச்சிகளும் அன்னதானமும் நடக்கும் இந்த அன்னதானத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நோய்கள் விலகும் என்பது ஐதீகம். 

கார்த்திகை பௌர்ணமி அன்று கிரிவலம் செய்தால் நம் வாழ்வு சிறக்கும்.

கார்த்திகை தீபம் தமிழர்களால் கொண்டாடப்படும் பழமையான பண்டிகைகளில் ஒன்று. ஜோதிர்லிங்கமாக சிவன் தோன்றியதைப் போற்றும் வகையில் கார்த்திகை," மகா தீபம்" என்று அழைக்கப்படுகிறது கார்த்திகை மாத பௌர்ணமி அன்று கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது கார்த்திகை தீபத்தன்று வீட்டை மண் விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கம் அன்று பணியாரம் அதிரசம் பொரி உருண்டை போன்றவற்றை செய்து நைவேத்தியம் செய்வர். இந்த தீபத் திருவிழா பரணி தீபம், கார்த்திகை தீபம் மற்றும் அதற்கு அடுத்த நாளும் சேர்த்து மூன்று நாட்கள் கொண்டாடப்படும். 

    

கார்த்திகையில் கார்த்திகை நாளன்று திருமங்கையாழ்வார், திருவாலி திருநகரி அருகில் உள்ள திருக்குறையலூரில்‌ அவதரித்தார். கள்ளர் குலத்தில் பிறந்த இவரது இயற்பெயர் 'நீலன்' என்பதாகும். ஆழ்வார்களில் இவர் கடைசி ஆழ்வாராகும். இவர் தனது ஆலி நாடன் குதிரையில் பாரதம் முழுவதும் 86 திருத்தலங்களுக்குச் சென்று அங்கு உறையும் எம்பெருமான்களைப் பாடியுள்ளார். அவர் 1134 திவ்ய பிரபந்தப் பாடல்களையும், பெரிய திருமடல், சிறிய திருமடல் என்பவற்றையும் எழுதியுள்ளார்.

கார்த்திகை மாதத்தை ஆன்மீக மாதம் என்றே கூறலாம் ஏனெனில் முருகன், ஐயப்பன் ,சிவன் என அனைத்து தெய்வங்களையும் வழிபடும் சிறப்பு வாய்ந்த மாதமாக இந்தக் கார்த்திகை மாதம் உள்ளது. ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி 48 நாட்கள் விரதம் இருந்து,மாலை அணிந்து சபரிமலைக்குச் செல்வர். கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை மலர்கள் சாற்றி வழிபட்டால், தேவர்கள் அடையும் மோட்ச நிலையைப் பெறலாம் மேலும், துளசி இலையை கொண்டு அர்ச்சனை செய்தால் ஒவ்வொரு துளசியும் ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும். 

இந்த மாதத்தில் திருமணம் செய்தால் இல்வாழ்க்கை சிறக்கும் என்பதால் இதனை "திருமண மாதம்" என்று கூறுகிறார்கள். கார்த்திகை மாதத்தில்," பகவத் கீதை" படித்து இறைவனை வழிபட்டால் மன அமைதி உண்டாகும். மிகுந்த சிறப்பு வாய்ந்த இம்மாதத்தில் அனைத்து விரதங்களையும் கடைபிடித்து மிகுந்த பலன்களைப் பெறுவோம்.



அலமேலு ரங்கராஜன்

எழுத்தாளர்

ஸ்ரீவில்லிப்புத்தூர்


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%