நண்பன் ரமேஷ் அதைச் சொன்னதும் அரண்டு போனான் கிரி, "அப்ப... எங்க வீட்டுக்கும் அந்த லெட்டர் வருமா!?" கேட்டான்.
"அதிலென்ன சந்தேகம்?.. இன்னிக்கு வந்தாலும் வரும்!" ரமேஷ் அழுத்திச் சொன்னான்.
"ச்சை... தப்புப் பண்ணிட்டோம்... காலேஜ் ஸ்டிரைக் அன்னிக்கு மத்தவங்கெல்லாம் பிரின்ஸ்பால் ரூமுக்கு வெளியே கும்பலா நின்னு கோஷம் போட்டாங்க!... நாமும் அவங்க கூடவே இருந்திருக்கலாம்!... அதை விட்டுட்டு பெரிய ஹீரோயிஸம் காட்டுறதா நினைச்சுட்டு நம்ம கேங் ஏழு பேர் மட்டும் ஆடிட்டோரியத்துக்குள்ளார புகுந்து குஷன் சீட்டுகளைக் கிழிச்சு, மைக்கை உடைத்து, லைட்டுகளை சேதமாக்கி, ஸ்பீக்கர்களை தூள் தூளாக்கி... துவம்சம் பண்ணினோம்"
"மச்சி... அதுக்குப் பின்னாடி தானே காலேஜுக்குள்ளார நம்ம பேரே பயங்கரமா பரவிச்சு... நம்ம கேங்கும் "பிஸ்தா கேங்" ஆயிடுச்சு!.. நீயும் "ரூட்டுத் தலை"ஆயிட்டே" என்றான் ரமேஷ்.
"அதோட பலன் என்ன?ன்னு பார்த்தியா?.. ஸ்ட்ரைக் முடிஞ்சு காலேஜ் திறந்ததும் நம்ம ஏழு பேரை மட்டும் சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க" என்றான் கிரி.
"அதான் இப்ப வரச் சொல்லி லெட்டர் வந்திடுச்சே?" ரமேஷ் சொல்ல.
"அது லெட்டர் இல்லடா... அது ஒரு அணுகுண்டு... அதுல என்ன வந்திருக்கு?.. "உங்க அப்பாவை நேர்ல கூட்டிட்டு வந்து.. பிரின்ஸ்பால் கிட்ட மன்னிப்பு கடிதம் எழுதி தரணும்!... அதோட ரூபாய் பத்தாயிரம் கட்டணும்... அதுவும் ஐந்தாம் தேதிக்குள்ள கட்டணும்"னு வந்திருக்கல்ல?"
அவன் சொன்னதற்கு ரமேஷ் பதில் பேச முடியாமல் நிற்க,
"இன்னைக்கு ஈவினிங் எங்க அப்பா வேலையிலிருந்து வந்து அந்த கடிதத்தை படிச்சிட்டு என்னென்ன ஆட்டம் போடப் போறாரோ?" உள்ளுக்குள் நடுங்கினான் கிரி.
மாலை வீடு திரும்பிய கிரியின் தந்தை ராசையா டீப்பாயின் மீதிருந்த கடிதத்தைப் படித்து விட்டு, மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டு நகர்ந்தார்.
பூகம்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் கிரி.
ஆனால் எதுவும் நடக்கவில்லை.
நான்காம் தேதி மாலை,
"கிரி... இங்க வாப்பா!" தந்தை அழைக்க ஓடினான்.
'நாளைக்குத் தேதி அஞ்சு... நான் காலேஜுக்கு வரணும்... எத்தனை மணிக்கு வந்தா உங்க பிரின்ஸ்பால் இருப்பாரு?" சாதாரணமாய்க் கேட்டார்.
"காலைல 11 மணிக்கு"
"சரி... சரி நான் வந்துடறேன் நீ... காலேஜ்லதானே இருப்பே?".
"ஆமாம்... அங்கதான் இருப்பேன்!"
அடுத்த நாள் காலை 11 மணி,
கல்லூரி வாசலில் தந்தைக்காகக் காத்திருந்தான் கிரி.
தன் பாடாவதி டி.வி.எஸ்-50ல், ஊரையே தூக்கும் சத்தத்தோடு, வியர்வையில் நனைந்த சட்டையோடு வந்த அவன் தந்தை ராசையா வண்டியை நிறுத்தி விட்டு, கிரியையும் அழைத்துக் கொண்டு பிரின்ஸ்பால் ரூமுக்கு சென்றார்.
கிரி மீது பிரின்ஸ்பால் கூறிய குற்றச்சாட்டுகளையெல்லாம் அமைதியாய்க் கேட்டு விட்டு, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்தவர், தானே பணம் கட்டும் கவுண்டருக்குச் சென்று பணத்தையும் கட்டினார் ராசையா.
பின்னர் கிரியிடம் வந்தவர், கழுத்துப் பகுதி வியர்வையை துடைத்துக் கொண்டே, "சரி.. நான் கிளம்புறேன்பா... இந்தா.... கேண்டீன்ல போய் ஏதாவது சாப்பிடு" என்றபடி பணத்தை அவன் சட்டைப் பாக்கெட்டில் வைத்து விட்டு நகர்ந்தார்.
அதே ஓட்டை டி.வி.எஸ்.50ல் பெரும் சத்தத்தோடு அவர் செல்வதைப் பார்த்தபடி நின்ற கிரியின் மனசு நொறுங்கிப் போனது. "அப்பா என்னைத் தேடி விட்டுப் போங்கப்பா" உள்ளுக்குள் அழுதான்.
அக்கணமே தீர்மானித்தான். 'இனிமேல் படிப்பை தவிர வேறு எந்த விஷயத்திலும் தலையிடவே மாட்டேன்!... இது என் அப்பா மீது சத்தியம்".
முற்றும்.

முகில் தினகரன்
கோயம்புத்தூர்.