கிருஷ்ணகிரியில் 6 வழித்தடங்களில் ‘மகளிர் விடியல்’ பேருந்து சேவை கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி, அக். 13–
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், 6 வழித்தடங்களில் மாற்றியமைக்கப்பட்ட மகளிர் விடியல் பேருந்து சேவைகளை கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, பர்கூர் வட்டம், அஞ்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட கொல்ரூர் பகுதிநேர நியாய விலைக் கடையை அவர்கள் திறந்து வைத்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தினேஷ் குமார் அவர்கள் கூறியதாவது:
“கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 3 புதிய புறநகர், 5 நகர வழித்தடங்கள் என மொத்தம் 8 புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. மேலும், 101 வழித்தட நீட்டிப்பு மற்றும் மாற்றங்களுடன் மொத்தம் 109 வழித்தடங்களில் 121 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் 280 கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 4.77 லட்சம் பேர் பயனடைந்து வருகின் றனர்.” அவர் மேலும் கூறியதாவது:
“பழைய புறநகர் பேருந்துகளுக்குப் பதிலாக 55 புதிய பேருந்துகள், 39 புனர மைப்புப் பேருந்துகள் என மொத்தம் 94 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல், ‘மகளிர் விடியல்’ பயணிகளுக்காக 52 புதிய பேருந்துகள், 15 புனரமைப்புப் பேருந்துகள் என மொத்தம் 67 பேருந்துகள் சேவையில் உள்ளன.”
தற்போது தொடங்கப்பட்டு உள்ள புதிய பேருந்து சேவை மூலம் 7 கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 10,581 பேர் பேருந்து வசதி பெற்று பயனடைவார்கள் என தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் வசதியாக நியாய விலைப் பொருட்களை பெறும் வகையில் புதிய பகுதிநேர மற்றும் முழுநேர நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அஞ்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள நாய்கனூர் தாய்கடையிலிருந்து, கொல்ரூர் பகுதிநேர நியாய விலைக் கடை திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதன் மூலம் 156 குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் பகுதிகளில் குடிமைப் பொருட்களை எளிதில் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, நகரமன்ற தலைவர் பரிதா நவாப், துணைத்தலைவர் சாவித்ரி, வட்டாட்சியர்கள் ரமேஷ், சின்னசாமி, கூட்டுறவு சரக பதிவாளர் ஆதீஸ்வரி, போக்குவரத்து கழக துணை மேலாளர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.