நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்க விழா
Oct 15 2025
11

நாமக்கல், அக். 13–
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டி.ஆர்.அருண் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினருமான வீ.ராமராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் உரையில் கூறியதாவது:–
“தேர்தல் காலங்களில் நடைபெறும் ஊழல் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, வெளிக்கொணரும் பணி சட்ட மாணவர்களிடமிருந்து தொடங்க வேண்டும். சாதி, மதம், பிரிவினை போன்ற எண்ணங்களும் வெறுப்பு பேச்சுகளும் மாணவர்களிடம் இருக்கக்கூடாது. சமூக ஒற்றுமை மற்றும் தேச வளர்ச்சிக்கு இவை தடையாகின்றன.
சுய முன்னேற்றமும் சமூக முன்னேற்றமும் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. தேசம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே தனிநபர் உயிரும் உடைமையும் பாதுகாப்பாக இருக்கும்,”
என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “வாக்கு, வாக்காளர், தேர்தல் இவை ஜனநாயகத்தின் மூன்று அடிப்படை கூறுகள். இவற்றின் தரம் சட்டமன்றம், நாடாளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை ஆகிய அமைப்புகளின் நிலைத்தன்மையை தீர்மானிக்கின்றன. வாக்காளர்களின் அறியாமை, ஊழல், சர்வாதிகாரம் ஆகியவை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன,”
என்று கூறினார்.
அவர் தொடர்ந்தும், “காலத்தின் தேவைக்கேற்ப ‘வாக்காளரியல் கல்வி’ போன்ற புதிய கல்வி பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் அரசியல் அறிவியல் பாடப்பிரிவுகள் உள்ளன. ஆனால், மிகக் குறைந்த பல்கலைக்கழகங்களில் தான் ஜனநாயகம் மற்றும் தேர்தல் நிர்வாகம் சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன,” என்றார்.
விழாவில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பாராட்டு கோப்பைகள் வழங்கப்பட்டன. பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், சட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை உதவி பேராசிரியர்கள் பிரியா, சுமதி, சுவர்ணலட்சுமி மற்றும் உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் ஒருங்கிணைத்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?