கி.ரா. விருது " ₹5,00,000 இந்த வருடம் எழுத்தாளர் சு. வேணுகோபால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கி.ரா. விருது - 2025
சக்தி மசாலா நிறுவனம் விஜயா பதிப்பகம் வாசகர் வட்டம் இணைந்து வழங்கும் "கி.ரா. விருது " ₹5,00,000 இந்த வருடம் எழுத்தாளர் சு. வேணுகோபால் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கோவை பீளமேடு PSG தொழில்நுட்ப கல்லூரி
" D" அரங்கில் நேற்று (28.09.25) நடைபெற்ற இவ்விழாவில் இவ்விருதினை வழங்கி , உச்சநீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் சிறப்புரை ஆற்றுகையில்,
"புத்துயிர்ப்பு" எனும் சு.வேணுகோபால் கதையை சிலாகித்து பேசியதோடு, நாமக்கல் கவிஞர் திருக்குறளை சிறப்பித்த கவிதையையும் கூறி அதற்கான விளக்கமும் தந்தார்.
கௌரியின் இறை வணக்கத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் டாக்டர் பி.சி.துரைசாமி தலைமையுரை ஆற்றினார்.
வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் பாவண்ணன், மகாபாரதத்தில் அபிமன்யு மனைவி உத்தரை முனிவருக்கு செய்த பணிவிடையால் கிடைத்த விசித்திரக் கண்ணாடி பற்றிய கதையைச் சொன்னார் .
அதில் யாரைப் பற்றி நினைக்கிறார்களோ அவர் உருவம் தான் தெரியுமாம், அவரை நினைப்பவர் உருவம் தெரியாதாம்.
உத்தரை நினைத்ததும் கண்ணாடியில் கணவர் "அபிமன்யு" முகமும் அபிமன்யு நினைத்ததும் மனைவி "உத்தரை " முகமும் தெரிந்ததாம்.
இதை பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை நினைக்கச் சொன்ன போது , " சகுனி" உருவம் தெரிந்ததாம். அதுபோல ஒரு கண்ணாடி தற்போது இருந்தால், எழுத்தாளர் "சு.வேணுகோபால்" உருவம் தெரியாது அவரது மண்ணும் மண்சார்ந்த மக்களும்தான் தெரிவார்கள் என ஒரு அழகான ஒப்பீட்டுடன் கதையை முடித்தார்.
சிவகுமார் தான் 1963 ம் வருடம் முதல் "டைரி" எழுதி வருவதாகக் கூறி இந்த நிகழ்வும் " டைரியில்" பதிவாகும் என்றார்.
டாக்டர் சாந்தி துரைசாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கினார். தமிழுக்கான தங்களின் பங்களிப்பு என்றும் என்றென்றும் இத்தகைய நிதியளிப்பாகத் தொடரும் எனக் கூறினார்.
எழுத்தாளர் சு.வேணுகோபால் தன் ஏற்புரையில் :
1986- 1994 எட்டு ஆண்டுகள் வாசகனாக இருந்து, எழுத்தாளர் ஆக மாறிய கதையையும்
ஆரம்பத்தில் மகாத்மா காந்தியின் " சத்திய சோதனை"
கவிஞர் கண்ணதாசனின் " வனவாசம்" படித்து அதைப்போல எழுத வேண்டும் என நினைத்தாராம் அது அவர்களின் வாழ்க்கை வரலாறு எனத் தெரியாமல்...
நீதியரசர் மகாதேவன் தந்தை அரங்கநாதன் எழுத்துகளை கையெழுத்துப் பத்திரிக்கையான " முன்றில்" இதழில் படித்ததையும்
நடிகர் சிவகுமாரின்
" கொங்குத்தேன்" புத்தகத்தில் அவரின் சின்னம்மா மகன் குமரேசன் தியாக உள்ளத்தையும் வாசித்ததைக் குறிப்பிட்டு இருவரும் தனக்கு தொப்புள் கொடி உறவு என்றார்.
29 ஆண்டுகளுக்கு முன் சிவகுமாரை ஒரு உணவகத்தில் சந்தித்து மின்னல் வேகத்தில் சென்ற அவரோடு பேச முடியாமல் போன தருணத்தையும் நினைவு கூர்ந்தார்.
தன் ஆரம்பகாலத்தில் சந்தித்த எழுத்தாளுமைகள் ஜெயகாந்தன், சுஜாதா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்ததுடன், வழிகாட்டியான கோவை ஞானி , பரிசு வழங்கிய சக்தி மசாலா, விஜயா வாசகர் வட்டம், விழாவைச் சிறப்பித்த பலருக்கும் நன்றி தெரிவித்தார்.
பார்வையாளர்களாக தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதன் , கவிஞர் சிற்பி.பாலசுப்ரமணியம் இருவரும் வந்திருந்தது தனிச்சிறப்பு.
முன்னதாக விஜயா பதிப்பகம் வேலாயுதம் எல்லோரையும் வரவேற்க, நிகழ்ச்சியை திரு.இல.சிவ சக்தி வடிவேல் தொகுத்து வழங்கினார்.
நாட்டுப்பண் உடன் விழா இனிதே நிறைவடைந்தது.
ஸ்ரீகாந்த் திருச்சி