குவாரிக்குத் தடை: திருமங்கலம் மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி; - ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்
மதுரை, அக். 5 –
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட திருமால் கிராமத்தில் இயங்கி வந்த குவாரியின் அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பெருமிதம் தெரிவித்தார். இது, "மக்களுக்காகத் தான் திட்டம், திட்டங்களுக்காக மக்கள் அல்ல" என்ற போராட்டக் களத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறினார்.
வேளாண்மை பாதிப்பு குறித்த தொடர் போராட்டங்கள்
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பல தொகுதிகளிலும் வேளாண் விளைநிலங்கள், நீர்வழித்தடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடும் வகையில், குடியிருப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அழுத்தமான வெடிகள் வைத்து பாறைகள் தகர்க்கும் குவாரிகள் இயங்கி வருவதால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
இதனால் குடியிருப்புகள் சேதமடைவதுடன், நோய் தொற்றுகளும் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டிய உதயகுமார், இந்த அபாயகரமான சூழ்நிலையைத் தடுத்து நிறுத்தி விவசாயத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
திருமால் கிராமப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி, அ.தி.மு.க. இந்தப் போராட்டங்களை முன்னெடுத்தது. திருமங்கலம் தொகுதியில், திருமால் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தாய்மார்கள் மற்றும் விவசாயிகள் கனிம வளங்கள் அதிக அளவில் சுரண்டப்படுவதைத் தடுத்து நிறுத்த மன உறுதியுடன் போராடினர்.
இந்த மக்கள் நலன் சார்ந்த போராட்டத்தை மாவட்ட ஆட்சியர் கனிவுடன் பரிசீலனை செய்து, மாவட்ட வருவாய் அலுவலர், கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து, காலை 6 மணிக்குத் தொடங்கிய அறப்போராட்டம் நள்ளிரவு 12 மணி அளவில் மாபெரும் வெற்றி அடையும் வகையில், அந்தக் குவாரியின் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என வாழ்ந்த தலைவர்களின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அதேபோல, மக்களுக்காகத் தான் திட்டம், திட்டங்களுக்காக மக்கள் அல்ல என்று தொடர்ந்து போராடி வருவதால்தான் இந்தப் போராட்டக் களம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது, என்றும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
இந்த வெற்றியைப் பெற்றுத் தந்த மாவட்ட ஆட்சியர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பத்திரிகை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து மக்களுக்காகப் போராடுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.