மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு: தேர்தலுக்குள் நடத்த கட்டாயப்படுத்தவில்லை; அமைச்சர் சேகர் பாபு பேட்டி
மதுரை, அக்.5–
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை வரும் தேர்தலுக்குள் நடத்த வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை, கோயிலில் 186 திருப்பணிகள் பிப்ரவரிக்குள் நிறைவு
பெற்று குடமுழுக்கு நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மதுரையில் நேற்று தமிழ்நாடு ஹோட்டலில், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் அமைச்சர்கள் சேகர்பாபு, பி.மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா, மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், கோயில் இணை ஆணையர் என்.சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர். பின்னர், அமைச்சர் சேகர்பாபு
செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2009-ல் குடமுழுக்கு நடந்தது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று குட முழுக்கு நடத்த 186 திருப்பணிகள் ரூ.23 கோடியே 70 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 117 பணிகள் கோயில் நிதி ரூ.8.90 கோடியிலும், 69 பணிகள் உபயதாரர் நிதி ரூ.14.80 கோடியிலும் டிசம்பருக்குள் முழுமைபெறும்.
இதில் 2018 பிப்ரவரியில் தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்ததால், ரூ.35 கோடியே 30 லட்சத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. 79 தூண்களில் 18 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. தேவையான 15 அடி நீள கற்கள் கிடைக்காமல் பணியில் தொய்வு ஏற்பட்டது. இன்னும் 61 தூண்கள் வர வேண்டியுள்ளது. மீதமுள்ள தூண்கள் அக்.15-க்குள் வந்துவிடும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து குடமுழுக்கு நடத்தலாமா? என சிவாச்சாரியார்களிடம் ஆலோசித்து வருகிறோம். நடத்தலாம் என்றால் டிசம்பரிலேயே நடத்தி விடுவோம். வீர வசந்தராயர் மண்டபத்தோடு சேர்த்துதான் நடத்த வேண்டுமென்றால் பிப்ரவரிக்குள் குடமுழுக்கு பணிகள் நிறைவு பெறும். 18 உபகோயில்களில் 9 கோயில்களில்
குடமுழுக்கு நடந்துள்ளது. நவம்பருக்குள் 4 உபகோயில்களுக்கும், பிப்ரவரிக்குள் அனைத்து
கோயில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்படும். 2026 பிப்ரவரிக்குள் மீனாட்சி அம்மன்
கோயில் திருப்பணிகள் நிறைவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும். வரும் தேர்தலுக்குள் குடமுழுக்கு நடத்த வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. இதற்கும் எங்களது ஆன்மிக பணிக்கும் சம்பந்தம் இல்லை. போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளையும் கையாள்கிறது திமுக அரசு. இவ்வாறு அவர் கூறினார்.