கைசிக ஏகாதசி சிறப்புகள்

கைசிக ஏகாதசி சிறப்புகள்


கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி கைசிக ஏகாதசி என்று கூறப்படுகிறது. இதன் பெருமைகளை நாம் காண்போமா?


கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி ரமா ஏகாதசி எனவும், வளர்பிறை ஏகாதசி பிரமோதினி ஏகாதசி எனவும் என்றும் அழைக்கப்படுகிறது. பிரமோதினி ஏகாதசியே கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. 


கைசிக ஏகாதசியின் சிறப்பு:



இந்தக் கைசிகப் பண் ஏகாதசியன்று திருக்குறுங்குடி கோவிலில் குடி கொண்டுள்ள நம்பியின் மீது, பக்தியுள்ள பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவான் என்னும் பக்தரால் பாடப்பட்டதாகும். கைசிக ஏகாதசி வரலாற்றை நினைவு கூறுவதே இந்த ஏகாதசியின் சிறப்பாகும்.


திருக்குறுங்குடி உற்சவம் :


 திருக்குறுங்குடியில் என்றும் கைசிக ஏகாதசி அன்று

நம்பாடுவானின் கதை நாடகமாக நடித்துக் காட்டப்படுகிறது.


இந்த ஏகாதசி என்று விரதம் இருந்தால், ஆண்டில் அனைத்து ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் கிடைக்கும். அன்று துளசி இலை கொண்டு பகவான் ஸ்ரீ விஷ்ணுவை வணங்குவது மிகவும் சிறப்பாகும் நவரத்தினத்தை பகவானுக்கு சமர்ப்பிப்பதை காட்டிலும் உத்தமமாகும்.


கைசிகம் என்பது ஒரு வகை பண் ஆகும். இது வராக அவதாரத்தில் பூமாதேவித் தாயாருக்கு வராகப் பெருமாள் கூறியதாகும். அதாவது இந்தச் சரித்திரம் வராக மூர்த்தி பூமி பிராட்டியிடம் சொன்னது. வசுந்தரா தேவியிடம் சொன்னது.


பெருமாளுக்கு ஜாதி, குலம் போன்ற வித்தியாசம் கிடையாது. பக்தனா? என்பது மட்டும்தான் பகவான் பார்க்கிறான்.


திருப்பதி கோவிலுக்கு செல்கின்றவர்கள் பலர் பாமரர்கள். அவர்கள் இடைவிடாது நாம ஜெபம் கோவிந்தா! கோவிந்தா! என்று சொல்லிக் கொண்டே மலையேறுவர். பொது தரிசனத்தில் பகவான் கோவிந்தனை ஒரு சில நொடிகள் மட்டுமே தரிசிக்கின்றனர். பகவான்

மலையப்பனோ அவர்களை திவ்யமாக 

கடாக்ஷிகிறார்.



திருக்குறுங்குடி என்ற திவ்ய தேசம், திருநெல்வேலிக்கு அருகே வானமாமலைக்கு அருகில் உள்ளது.


இதன் அருகில் மகேந்திரபுரி உள்ளது. இந்தக் கோவிலில் பெருமாளின் பெயர் சுந்தர பரிபூரண நம்பி என்றும், அழகிய நம்பி என்றும் வடிவழகிய நம்பி என்றும் அழைப்பார்கள்.

பராங்குச நாயகி என்னும் நாயிகா பாவத்தில் நம்மாழ்வார் பாடும் பாசுரம்.



எங்ஙனேயோ அன்னைமீர்காள்! என்னை முனிவது நீர்

நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்

சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும்

செங்கனிவாய் ஒன்றினோடும் செல்கின்றதென் நெஞ்சமே


அன்னைமீர்காள்! என்னைப் பெற்ற நீங்கள் எனக்கு விருப்பமானதைச் செய்யாமல், என்னை நினைத்து உகக்க வேண்டியிருக்க இப்படிக் கோபப்படுவது ஏன்? நம் குடிக்குத் தனித்துவம் வாய்ந்தவராய், அழகிய திருமேனி உடையவராய், திருக்குறுங்குடியில் கல்யாணகுண பூர்த்தியையுடைய நம்பியை நான் அனுபவித்தபின் அவருடைய சங்கினோடும், திருவாழியோடும், தாமரைபோலே அழகாய் இருக்கும் திருக்கண்களோடும் சிவந்த கனிபோலே தனித்துவமாய் இருக்கும் திருவதரத்தோடும் என் நெஞ்சு ஆசையுடன் செல்கிறது.

என்ற அனுபவித்து பாடுகிறார்.


திருக்குறுங்குடி அருகில், பாணர் குலத்தில் பிறந்த நம்பாடுவான் என்பவர் வாழ்ந்து வந்தார். ஒவ்வொரு ஏகாதசியும் விரதம் இருந்து அன்று இரவு, திருக்குறுங்குடி கோவில் வாசலில் நின்று நம்பியை தியானித்து பண்வாசிப்பது வழக்கம். ஒரு நாள் கோவில் திறந்ததும் அர்ச்சகர் அளிக்கும் பிரசாதத்தை பெற்றுக் கொண்டு தன்னுடைய துவாதசி பாரணையை முடித்துக் கொள்வார்.


கார்த்திகை மாதம் பௌர்ணமிக்கு பிறகு வரும் ஏகாதசி அன்று வழக்கம்போல் காட்டு வழியாக செல்லும் பொழுது நம்பாடுவானை ஒரு பிரம்ம ராட்சசன் பிடித்துக் கொண்டான்.

பிரம்ம ராட்சசன் 

நம்பாடுவானை சாப்பிடத் தயாராக இருந்தது.

நம்பாடுவான் பிரம்ம ராட்சசனிடம் நான் திருக்குறுங்குடி சென்று நம்பிக்கு கைசிகப் பண்ணில் பாட்டுப் பாடி அவரை வழிபாடு செய்து விட்டு வந்து உனக்கு இரையாகிறேன் என்று கூறினார். ஆனால் ராட்சசன் அவருடைய வார்த்தைகளை நம்பவில்லை.


நம்பாடுவான் 18 சத்தியங்களை பிரம்ம ராட்சசனிடம் செய்தான்.

அதற்கு நம் பாடுவான் நான் திரும்பி வராவிட்டால், சத்தியத்தை மீறியவன் எந்த நரகத்தை சென்று அடைவானோ அந்த நரகத்தை அடைவேன் என்று கூறினார்.

பிறர் மனைவியை ஆசைப்பட்டவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன், ஆனால் ராட்சசனோ எதற்கும் மசியவில்லை.


நான் நம்பாடுவான் ஒவ்வொரு சத்தியமாக செய்து கொண்டே போகிறான். வேதம் படித்தவர்களை கொல்வது, மது அருந்துவது, தான் நல்ல உணவை உண்டு விட்டு விருந்தினர்களுக்கு, சுமாரான உணவை தருபவன், எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன் என்றான்.



ஒருவன் நிலத்தை தானம் கொடுத்து விட்டு, அந்த நிலத்தைய

அபகரித்துக் கொள்பவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன்.


இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவனை ஏமாற்றியவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன்.


அமாவாசை, ஏகாதசி மற்றும் சிரார்த்த நாட்களில் தன் மனைவியுடன் தாம்பத்யம் வைத்துக் கொள்பவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன்.


உண்ட வீட்டிற்கே எவன் துரோகம் நினைக்கின்றானோ அவனடையும் நரகத்தை நான் அடைவேன்.


தன்னுடைய பெண்ணை ஒருவருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக சொல்லிவிட்டு, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டால், அவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன்.


தினமும் குளிக்காமல் உணவருந்துபவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன்.


ஒருவருக்கு இந்த நாளில் இந்த பொருளைத் தருகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு, அதே தினம் அந்த நபர் வந்தவுடன் தரமாட்டேன் என்று கூறுபவன் எந்த நரகத்தை அடைகிறானோ அந்த நரகத்தை அடைவேன்.


நண்பனின் மனைவியை அபகரித்தவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன்.


ராஜபத்தினி குரு பத்தினியை அபகரித்தவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன்.


இரண்டு மனைவிகளை திருமணம் செய்து கொண்டு, ஒரு மனைவியிடம் மட்டுமே அன்பு செலுத்துபவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன்.


திருமணம் செய்து கொண்டு பின் அந்த பெண்ணை ஏங்க வைத்துவிட்டு வெளியூருக்கு செல்பவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன்.


எவன் பசுமாடு தண்ணீர் குடிக்க வரும் பொழுது, அதனை குடிக்க விடாமல் தடுத்து அடித்து விரட்டுகிறானோ அவனடையும் நரகத்தை நான் அடைவேன்.



பஞ்ச மகா பாவம் செய்தவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன்.


பரமாத்மாவான/ பரம்பொருளான நாராயணனை எவன் வணங்காமல் இருக்கிறானோ அவனடையும் நரகத்தை அடைவேன்.


இப்படி நம்பாடுவான் கூறிக் கொண்டே வரும் பொழுது பிரம்மராக்ஷசன் தன்னுடைய பாதிப்பிடியை விட்டு விட்டான்.


சர்வேஸ்வரன் ஆன நாராயணனை மற்ற தேவதைகளுடன் ஒப்பிட்டுப் பேசுபவன் எந்த நரகத்தை அடைவானோ அந்த நரகத்தை அடைவேன். இந்த வார்த்தையை கூறியவுடன் நம் பாடுவனை விட்டு விட்டான் பிரம்ம ராட்சசன்.


 நீ மிகவும் கெட்டிக்காரன்தான். போய்விட்டு வா! உனக்காக காத்திருக்கிறேன் என்று நம்பாடுவானை அனுப்பிவிட்டது.


நம்பாடுவான் கோவிலுக்குச் சென்றார். அங்கு பெருமாள் மிகவும் களைப்புடன் இவருடைய கண்களுக்கு தெரிந்தார். தனக்கு இது வாழ்நாளின் கடைசி நாள் என்பதனால் மிகவும் உற்சாகத்துடனும் ஆசையுடனும் 

கைசிகப்பண்ணில் பகவானை நோக்கிப் பாடினார். சுந்தர பரிபூரண நம்பிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. 

நம்பாடுவானை மிகவும் மகிழ்ச்சியுடன் பகவான் கடாக்ஷித்தார்.


பகவானை சேவித்து முடித்தவுடன், மிகவும் மகிழ்ச்சியுடன் நம்புடுவான் பிரம்ம ராட்சசனை சந்திக்கச் சென்றான்.


செல்லும் வழியில் ஒரு கிழவர் 

நம்பாடுவானுக்கு முன் வந்தார். இந்த வழியில் 

பிரம்ம ராக்ஷசன் இருக்கிறது. இந்த வழியாகச் செல்லாதே. வேறு வழியாக உன்னிடத்திற்குச் செல் என்று கூறினார்.



நம்பாடுவான் அந்தக் கிழவரிடம் இதற்கு முன்பு நடந்தவற்றை விளக்கமாக எடுத்துக் கூறினான். 


ஆனால் கிழவரோ துஷ்டனுக்குச் செய்து தந்த சத்தியமானது காப்பாற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆபத்து சமயத்தில் பொய் சொல்லலாம் என்று கூறினார். ஆனால் அவர் கூறியதை நம்பாடுவான் ஏற்றுக்

கொள்ளவில்லை.

கிழவர் தன்னுடைய தாமரைக் கண்களால் நம்பாடுவானை கடாக்ஷித்தார். கிழவராக வந்தது வேறு யாருமில்லை. திருக்குறுங்குடி நம்பியே அவ்வாறு வந்தார். 

நம்பாடுவானின் உறுதித் தன்மையை சோதித்துப் பார்த்தார்.


நம்பாடுவான் திரும்பி வந்தததும் பிரம்ம ராட்சசன் உண்மையில் பயந்தே போய் விட்டான். உடனடியாக நம்பாடுவானின் கால்களில் விழுந்தான்.



நான் ஒரு அந்தணன். நான் செய்த யாகத்தில் தவறுகள் ஏற்பட்ட காரணத்தினால் யாகம் பாதியில் நின்று விட்டது. அதனால் நான் பிரம்ம ராட்சசனாக மாறிவிட்டேன்.

நீ கைசிகப் பண்ணில் பாடிய பாடலின் புண்ணியத்தை எனக்குத் தந்தாய் என்றால் எனக்கு இதிலிருந்து விமோசனம் கிடைக்கும் என்று கேட்டான்.


பிரம்ம ராட்சசன் இவ்வாறு கூறியதும் நம்பாடுவான் அவனிடம், நான் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி பகவானை நோக்கி பாடி விட்டு வருகின்றேன். நான் உனக்காக பகவானிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன் என்று கூறி, பிரம்ம ராக்ஷசனுக்காக 

நம்பாடுவான் கைசிகப்

பண்ணில் பாடி வேண்டிக் கொண்டான். பெருமாளுடைய கடாக்ஷத்தால் அந்த பிரம்ம ராக்ஷசனும் சாப விமோசனம் பெற்றான்.


பெருமாள், நம்மை பாடுபவன் என்ற காரணத்தினால் அவனுக்கு 

"நம்பாடுவான்" என்ற பெயரளித்தார்.


நம்பாடுவான் நீண்ட காலங்கள் வாழ்ந்து பெருமாளுக்கு கைங்கரியம் செய்து முக்தி அடைந்தான்.


ஸ்ரீரங்கத்தில் கைசிக ஏகாதசியின் சிறப்பு :


கைசிக புராணம் கூறிய வராஹப் பெருமாளையும், கீதாசார்யனான

ஶ்ரீ கிருஷணரையும் நாம் ஶ்ரீரங்கநாதரிடம் ஒருங்கே சேவிக்கலாம்.


புராணம் கேட்ட பூதேவி ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார்.

தம் நாச்சியார் திருமொழியில் இவ்வாறு பாடுகிறார்.


"பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்

மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்

தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்

பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே".


கைசிக ஏகாதசியானது திருவரங்கம், திருக்குறுங்குடி, திருமலை, திருவல்லிக்கேணி மற்றும் அனைத்து திவ்யதேசங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


திருவரங்கத்தில் கைசிக ஏகாதசி அன்று நம்பெருமாளுக்குத் திருமஞ்சனம், இரவு 9 மணிக்கு மேல் அர்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் ( போர்வைகள்)

சாற்றப்படுகின்றன. 365 வெற்றிலை பாக்குகள் தரப்படும். 365 தீப ஆரத்திகள் எடுக்கப்படுகின்றன.


அதன் பிறகு இரவு 12 மணிக்கு மேல் பராசர / வேதவியாச பட்டர் வம்சத்தில் வந்த ஆசார்யர் கைசிகபுராணம் வாசிப்பார். அவர் வாசித்து முடிந்ததும் அவரைக் கோவில் மரியாதைகளுடன் அழைத்துச் சென்று உத்திர வீதிகளில் வலம் வந்து அவர் திருமாளிகையில் விட்டு வருவார்கள்.


கற்பூர படியேற்றம் :


கைசிக துவாதசி அன்று அதிகாலை அர்ச்சுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு, சரியாக 5.45மணிக்கு மேலப்படியேறி ஆஸ்தானம் சென்று சேர்வார். 

எம்பெருமான் இந்த இடங்களில் , அழகான நடை போட்டு உள்ளே செல்லும் பொழுது பச்சைக் கற்பூரங்களைத் தூவி உள்ளே அழைத்துச் செல்வர். இதற்கு “கற்பூரப் படியேற்ற சேவை” என்று பெயர்.


திருவரங்கத்தில் கற்பூர படியேற்ற சேவையின் சிறப்பு :


ஒருமுறை விஜயரங்க சொக்கநாதர் தன்னுடைய குடும்பத்துடன் கற்பூரப் படியேற்றம் சேவிக்க வந்தார். அவர் வருவதற்கு முன்னர், கற்பூரப் படியேற்ற சேவை முடிந்து விட, ராஜாவான தனக்காக மீண்டும் செய்து காட்டும்படி வேண்டிக் கொள்கின்றார். இங்கு ரங்கராஜனுக்கு ஒரு முறை நடந்து முடிந்த சேவையானது மீண்டும் மற்றவருக்காக செய்து காட்ட முடியாது. பாஞ்சராத்திர ஆகம விதிப்படியே, பெருமாளுக்கான அனைத்து சேவைகளும் நடக்கின்றது. "ஒச்சேட்டிக்கு வாருங்கள்" என்று கூறிவிட்டனர்.


இதனால் மனது வருத்தம் அடைந்த விஜயரங்க சொக்கநாதர் தன் குடும்பத்துடன் ஸ்ரீரங்கத்திலேயே ஒரு வருடம் தங்கியிருந்து அடுத்த வருடம் கற்பூர படியேற்ற சேவையினை ஆனந்தமாகக் கண்டு களித்து அதன் பின்னர் தன்னுடைய நாட்டிற்குத் திரும்பினார்.


இச்செயலின் நினைவாக ஸ்ரீரங்கத்தில் இரண்டாவது திருச்சுற்றான ராஜ மகேந்திரன் சுற்றில் இவருடைய குடும்பத்தினருடன் கூடிய சிலை வைக்கப்பட்டுள்ளது.


வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்தக் கற்பூரப்படியேற்ற சேவையிலே நாமும் 

ஸ்ரீ ரங்கனை கண்டு மகிழ்வோம் அவருடைய ஆசியினைப் பெறுவோம். 


திருக்குறுங்கடியில் இன்றும் ஶ்ரீவைஷ்ணவ நம்பிக்குத் திருமஞ்சனம்

இரவு முழுவதும் நடைபெறும். வைஷ்ணவ நம்பிக்கு முன்னால் கைசிக மஹாத்மியம் நாடகமாக நடத்தப்படும். நடிப்பவர்கள் சிறந்த அலங்காரங்களுடன் தத்ரூபமாக நடிப்பார்கள். கைசிக துவாதசி அன்று இரவு பெருமாள் கருட சேவை கண்டருளுவார்.


கைசிக ஏகாதசிக்கு அடுத்த வருவது "சொல்ல வந்த ஏகாதசி" எதைச் சொல்ல வருகின்றது? அடுத்து வரப்போவது வைகுண்ட ஏகாதசி என்பதனை சொல்ல வருவதால் இந்த ஏகாதசிக்கு சொல்ல வந்த ஏகாதசி என்ற பெயர். இதை அடுத்து வருவது வைகுண்ட ஏகாதசி ஆகும்.


நாமும் இ ந்த ஏகாதசியின் பெருமைகளை உணர்ந்து கொள்வோம். பகவானின் அனுக்கிரகத்தை பெறுவோம். 🙏



ஹரே கிருஷ்ணா

கீதா வீரராகவன்

ஸ்ரீரங்கம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%