கை நீட்டாத கருணை

கை நீட்டாத கருணை



  பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தார் சுப்பிரமணியம்.

ஓய்வு பெற்ற கணக்காளர். வாழ்க்கையை நேர்கோட்டில் மட்டுமே கடந்தவர்.. சட்டம், ஒழுங்கு, நேர்மை 

ஆகிய மூன்றையும் கடவுளாய்ப் போற்றுபவர்..


    திடீரென்று எதுவோ உறுத்த மார்புக்குள் கையை விட்டுப் பார்த்தார். பணப்பை இல்லை.  அவர் கண்கள் உடனே பேருந்தை ஸ்கேன் செய்தது.  பின் கதவருகே நிற்கும் அழுக்குச் சட்டை இளைஞனைச் சந்தேகித்தார்.  அதை நிரூபணமாக்குவது போல் அவனும் அவசரமாய் இறங்கினான்.


    சுப்பிரமணியமும் இறங்கினார்.  

கத்தவில்லை. அவனைப் பிடிக்க ஓடவில்லை. நிதானமாய் அவனைத் துரத்தினார்.


     இளைஞன் ஒரு மருந்துக் கடைக்குச் செல்ல,. “இப்பப் போய் பிடிச்சா சரியாயிருக்கும்” சுப்ரமணியன் மனம் சொன்னது. ஆனால் கால்கள் நகரவில்லை.


    இளைஞன் கையிலிருந்த பணத்தை எண்ணிக் கொடுக்க, மருந்துக்கடைக்காரன் அவன் கேட்ட மருந்துகளைத் தந்தான்.


    சுப்பிரமணியம் நிதானித்தார்.


    மருந்துக் கடையிலிருந்து வெளியே வந்த இளைஞன் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தான். 


     சுப்பிரமணியமும் பின் தொடர்ந்தார்.


     மருத்துவமனைப் படுக்கையில் 

உட்கார்ந்திருந்தாள் ஒரு மூத்த பெண்மணி. 


      இளைஞன் மருந்துப் பொட்டலத்தை அவளது கையில் வைத்தான். “இந்தாங்கம்மா…”


     அந்தப் பெண்மணி அவனது கையைத் தொட்டுச் சொன்னாள்: “எனக்கு நீதாண்டா மருந்து…”


     சுப்பிரமணியன் தனக்குள் எதோவொன்று உடைந்து விழுவதை உணர்ந்தார்.


     அந்தப் பெண்மணி அவனுடைய தாய் போலிருந்தாள்.


     அவன் அங்கிருந்து கிளம்பும் போது சுப்பிரமணியம் அவன் எதிரே நின்றார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.  அவன் கண்கள் “மன்னிச்சிடுங்க” என்றது..


     சுப்பிரமணியம் ஒன்றும் சொல்லவில்லை. அவருக்குள் 

போலீஸ்… திருடன்… குற்றம்… எதுவுமே தோன்றவில்லை.


     மெதுவாகச் சொன்னார், “அவங்களை கவனமாய்ப் பார்த்துக்க”.  அவ்வளவுதான்.  இளைஞன் உடைந்து அழுதான்.


      சுப்பிரமணியம்  மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார்.


     வானம் இருண்டிருந்தது. ஆனால் அவருக்குள் வெளிச்சம்.  “இவனுக்கு உதவ ஆண்டவன் எனக்குத் தந்த வாய்ப்புதான் இது…” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே வீடு நோக்கி நடந்தார்.


     அடுத்த மாதத்தில் ஒரு நாள் சுப்பிரமணியம் அதே மருத்துவமனைக்கு சென்றார். 


     அந்த மூத்த பெண்மணி இல்லை. 


     ஆனால் வாசலில் ஒரு இளைஞன் நின்றிருந்தான். சுத்தமான சட்டை. கழுத்தில் வேலை அடையாள அட்டை.


      அவன் சிரித்தான். “அய்யா… அன்று நீங்கள் எதுவும் செய்யாததால்தான் இன்னைக்கு நான் காவலாளியாய் நிற்கிறேன்…”


      சுப்பிரமணியம் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டு நகர்ந்தார்.

 (முற்றும்)


முகில் தினகரன்

கோயமுத்தூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%