கொலுசுக் காதல்

கொலுசுக் காதல்

-முனைவர் என். பத்ரி

                  ஆனந்த் அன்று மாலை அந்த கிராமத்து ஈஸ்வரன் கோவிலுக்குள் நுழைந்தான். பிரதோஷகாலமானதால் கோவிலில் சுமாரானக் கூட்டம். ஸ்வாமியை கும்பிட்டவாறே போய்க் கொண்டிருந்த அவன் காலில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. குனிந்து பார்த்தான். அது ஒரு வெள்ளி கொலுசு.அதன் அருகினிலேயே அதனுடைய திருகாணியும் இருந்தது. ’தான் எடுக்காவிட்டாலும் வேறு யாராவது ஒருவர் இதை எடுக்கத்தான் போகின்றார்’ என்று நினைத்த ஆனந்த் அந்த கொலுசுவை எடுத்துக் தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

                     அது யாருடையது என்பதை அறியாத ஆனந்த் அரை மனதுடன் அருகிலிருந்த தன்னுடைய நகருக்கு புறப்பட்டுச் சென்றான். அவனுடைய படுக்கையில் பக்கத்தில் அந்த கொலுசு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தது. ’ஆண்டவன் இந்த கொலுசுவின் மூலம் தனக்கு தன்னுடைய துணையை காட்டுகின்றானோ?’என்ற எண்ணம் அவன்மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

                    32 வயதாகும் ஆனந்த் ஒரு வங்கி அதிகாரி. அப்பா, அம்மா இல்லை. திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தால்தான் வாழ்க்கை முழுமையாகும் என்று அவனுடைய அப்பா அடிக்கடி சொல்ல அவன் கேட்டதுண்டு. மேலும் வளைய வளைய அவனுடைய அம்மா சலங்கை ஒலியுடன் வீட்டில் வருவது அவருடைய அப்பாவுக்கு ரொம்பவும் பிடிக்குமாம்.

                  அந்த நினைவுகள் அவனை திரும்பத் திரும்ப வந்து வாட்டிக்கொண்டிருந்தன. இந்த ஒற்றை கொலுசு சொல்லும் செய்தி என்ன?இதன் உரிமையாளர்தான் ஒருவேளை என்னுடைய வாழ்க்கை துணையாக இருக்குமோ? என்ற யோசனை அவன் மனதை துரத்திக் கொண்டே இருந்தது.

                        கொலுசுவைப் பற்றிய புலன் விசாரனையைத் தொடக்க அடுத்த நாள் காலையே அந்தக் கோவிலுக்குப் போனான். அவன் கோவிலில் உள்ளே நுழையும்போது அர்ச்சனா அந்தக் கோவிலை விட்டு வெளியே வந்துக் கொண்டிருந்தாள். எதிர் எதிரே வந்த இருவரும் தலைகளை முட்டிக் கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர். ’சாரி’ சொல்லிக் கொண்டார்கள். சுமார் 28வயதாகும் அழகிய அர்ச்சனா அந்த ஒரு கனப்பார்வையில் ஆனந்த்தின் மனது முழுவதும் பரவி விட்டாள்.

                     அடர்ந்தக் கூந்தல், விரிந்த நெற்றிக்கு பொருத்தமான பொட்டு, கூர்ந்த மூக்கினை மேலும் அழகுப்படுத்திய மூக்குத்தி, புன்னகை மலராய் அவள் முகம்,செதுக்கிய சிலையாக அர்ச்சனா மொத்தமாக அவனுடைய மனதை கவர்ந்து விட்டாள்.அப்படியேதான் அர்ச்சனாவுக்கும்.

                                   போகும்போது திரும்பி, திரும்பி அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே போனாள்.’சரி’ இவளைப் போய் பெண் கேட்டால் என்ன?’ என்று எண்ணிக் கொண்டே கோவிலுக்குள் சென்றான் ஆன்ந்த்.

                                  ’அந்த ஒற்றை கொலுசு அவன் முட்டிய அர்ச்சனாவினுடையதுதான்’ என்று உறுதியாகச் சொன்னார் கோவில் அர்ச்சகர்.கடவுள் கருவறையிலிருந்து எதோ சொல்வது போல் இருந்தது அவனுக்கு.

                    அன்று பிற்பகல் அவன் பணிபுரியும் வங்கிக்கு எதேச்சையாக அர்ச்சனா வந்தாள்.அவளுடைய தந்தையின் கையெழுத்தில் வித்தியாசம் இருப்பதாக சொல்லி பணம் கொடுக்க மறுத்து விட்டார் பக்கத்து இருக்கை வங்கி அதிகாரி. இதை பார்த்துக் கொண்டிருந்த ஆனந்த் வலியத் தானே சென்று அர்ச்சனாவுக்கு பணம் எடுக்க உதவினான். வங்கிப் பணி முடிந்தவுடன் அர்ச்சனா ஆனந்துக்கு நன்றி சொல்லக் காத்திருந்தாள். இதை நல்வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட ஆனந்த் அர்ச்சனாவிடம் தனது விருப்பத்தைச் சொன்னான்.

            நன்றி சொன்ன அர்ச்சனாவும் தனக்கு செவ்வாய் தோஷம் இருப்பதால் யாரும் தன்னை திரு மணம் செய்துக் கொள்ள முன்வரவில்லை என்று ஏக்கப் பெரு மூச்சுடன் சொன்னாள்.

         ’இந்த ஒற்றை கொலுசு தான் நம்மை ஒன்று சேர்த்திருக்கிறது. உனக்கு சம்மதம் என்றால்”நான் உன்னை மணக்கத் தயார்”என்றுச் சொல்லி தன் பாக்கெட்டிலிருந்த அவள் தொலைத்த ஒற்றை கொலுசுவை எடுத்து அவளிடம் காட்டினான் தொலைத்த கொலு சுவை பார்த்த அர்ச்சனா.ஆச்சரியத்தில் உறைந்து போனாள்.

         .அர்ச்சனாவுக்கு என்ன? வங்கி அதிகாரி கணவனாக வந்தால் கசக்கவா போகிறது? வீட்டிற்குச் சென்று அவள் அம்மாவிடம் பேசினாள். ’முடிந்து விட்டால் நல்லதுதான்’ என்றாள் அவள்.’எனக்கும்தான்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் அர்ச்சனா.

               ஆனந்த்தின் விருப்பப்படி அதேக் கோவிலில் ஆனந்த்,அர்ச்சனா திருமணம்,சிறப்பாக நடந்து முடிந்தது.’என்னைப் பொறுத்தவரை இது கொலுசு கொண்டு வந்த காதல் திருமணம்’ என்று அர்ச்சனாவின் பெற்றோரிடம் சொன்னான் ஆனந்த். புதுமனைவி அர்ச்சனா அன்று இரவு முதல் கொலுசு ஏற்படுத்தும் ஒலியுடன் அவனுடைய வீட்டில் அவனுடைய அம்மாவைப் போல் நடமாடத் தொடங்கினாள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%