கோல்ட்ரிப்’ மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, அக்.6-
‘கோல்ட்ரிப்' மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ‘அன்புக் கரங்கள்' திட்டத்தின் கீழ் பதிவு செய்த 300 குழந்தைகளுடன் ஒரு நாள் சுற்றுலா மேற்கொண்டார். அப்போது, குழந்தைகளுக்கு பிடித்த உடைகளை வாங்கி தந்து இனிப்புகள் வழங்கினார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிர மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 82 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சைதாப்பேட்டை தொகுதியில் உள்ள குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் ஒருநாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு அது சிறப்பாக அமைந்தது. இது எனது மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது.
கடந்த 1-ந் தேதி மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் இருந்து தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு அவசர கடிதம் ஒன்று வந்தது.
அந்த கடிதத்தில், சிந்த்வாரா மாவட்டத்தில் குழந்தைகள் இறப்புக்கு தொடர்புடையதாக கருதப்படும் ‘கோல்ட்ரிப்’ மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு சர்ச்சைக்குரிய மருந்தான ‘கோல்ட்ரிப்’ உள்ளிட்ட 5 மருந்துகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் ‘டைதிலீன் கிளைகால்’ என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள் ‘கோல்ட்ரிப்’ மருந்தில் 48.6 சதவீதம் இருப்பதாக கண்டறியப்பட்டது. அன்றைய தினமே தமிழகம் முழுவதும் ‘கோல்ட்ரிப்’ மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதேபோல, ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்தி அந்த நிறுவனம் உடனடியாக மூடப்பட்டது. உரிமத்தை முழுமையாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசின் உடனடி நடவடிக்கையால் எந்த பாதிப்பும் தமிழத்தில் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?