கோவையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா: 209 பேருக்கு ரூ.26 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி
கோவை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழாவில், 209 பேருக்கு ரூ.25.75 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த உதவிகளை கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட தலைமை ஹாஜி அப்துல் ரகீம், முஸ்லீம் மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர் சாகுல் ஹமீது, கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர் லூயிஸ், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்–2 கௌரவ செயலாளர் உமர் ஷெரீப், நன்கொடையாளர் லீமா ரோஸ் மார்டின், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கீதா, சிறுபான்மையினர் நல அலுவலக கண்காணிப்பாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறுபான்மையினர் உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 அன்று கொண்டாடப்படுகிறது.
சிறுபான்மை சமூகங்களின் மொழி, மத, இன உரிமைகளை பாதுகாப்பதும், அவர்களின் சமத்துவம், கண்ணியம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதும், இந்தியாவின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதும் இந்நாளின் நோக்கமாகும்.
இவ்விழாவில், மாவட்ட சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் சிறு தொழில் தொடங்க 200 பேருக்கு தலா ரூ.10,000 வீதம் உதவித்தொகை வழங்க உத்தரவு, ஒரு பயனாளிக்கு ரூ.5,633 மதிப்பீட்டில் மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சுகுணாபுரம் குறிஞ்சி நகர் திட்டப் பகுதியில் 5 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகள் என மொத்தம் 209 பேருக்கு ரூ.25.75 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?